This Article is From Jan 14, 2019

“எங்களைத் தாக்கினாலும் தாக்கத்தை ஏற்படுத்துவோம்!”- தமிழிசையின் பன்ச்

பாஜக தலைமையிலான மத்திய அரசு, மக்களுக்கு நிறைய நல்லது செய்திருக்கிறது. தேசிய பொதுக் குழுவிலும் இதை எங்களுக்குச் சொல்லியிருக்கிறார்கள்

“எங்களைத் தாக்கினாலும் தாக்கத்தை ஏற்படுத்துவோம்!”- தமிழிசையின் பன்ச்

தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தலைமையில் இன்று சென்னை, தியாகராய நகரில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவகத்தில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. விழாக் கொண்டாட்டங்கள் முடிந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்தார் தமிழிசை.

அப்போது அவர், “பாஜக தலைமையிலான மத்திய அரசு, மக்களுக்கு நிறைய நல்லது செய்திருக்கிறது. தேசிய பொதுக் குழுவிலும் இதை எங்களுக்குச் சொல்லியிருக்கிறார்கள். அதையேதான் பிரதமர் மோடி, காணொலிக் காட்சி மூலம் தமிழக உறுப்பினர்கள் மத்தியில் பேசும்போதும் வலியுறுத்தியிருக்கிறார். பாஜக-வுக்கு எதிரான சதியை நல்ல பிரசாரங்கள் மூலமாக முறியடிப்போம்.

மோடியை விமர்சனம் செய்வது. மத்திய அரசு, தமிழகத்தைப் புறக்கணித்துவிட்டது என்று பொய்யான பிரசாரம் செய்வது. தமிழகத்தில் தாமரை மலருமா என்பதற்கு, கிண்டல் செய்வது, கேலி செய்வது, எல்லாம் இந்த போகியோடு போய்விடும்.

நாளையிலிருந்து பாஜக, பலம் பொருந்தியக் கட்சியாக இருக்கிறது என்பதை தமிழகத்திற்கு உணர்த்துவோம். பியூஷ் கோயல், எங்களின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார். அவரோடு நாங்கள் தேர்தலை சந்திப்பது குறித்து ஆலோசித்துள்ளோம். அவர் சிறப்பாக எங்களை வழி நடத்துவார்.

பிரதமர் மோடி, காணொலி மூலம் பேசுவது தமிழகத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றிருப்பது குறித்து கட்சியின் தலைமை மகிழ்ச்சித் தெரிவித்துள்ளது. சீக்கிரமே ஒரு தேசியக் கட்சி தமிழகத்தில் பலம் பொருந்தியதாக உருவெடுத்து ஆட்சியமைக்கும். பாஜக-வை எவ்வளவுதான் தாக்கிப் பேசினாலும், தமிழக அரசியலில் எங்களின் தாக்கம் இருக்கும். வருங்காலத்தில் நாங்கள்தான் தமிழகத்தை வழிநடத்துவோம்” என்று உறுதிபட பேசியுள்ளார்.

.