உலகின் மிகப்பெரும் சுகாதார திட்டத்தை கொண்டு வந்ததற்காக மோடியை பரிந்துரை செய்கிறார் தமிழிசை
அமைதிக்கான நோபல் பரிசுக்கு பிரதமர் நரேந்திர மோடியை பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் பரிந்துரை செய்துள்ளார்.
“பிரதான் மந்திரி ஜன் ஆரோக்ய ஆயுஷ்மான் பாரத்” என்ற தேசிய அளவிலான சுகாதார திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஞாயிறன்று கொண்டு வந்தார். இது உலகிலேயே மிகப்பெரும் சுகாதார திட்டமாக கருதப்படுகிறது.
இந்த நிலையில், மிகப்பெரும் சுகாதார திட்டத்தை கொண்டு வந்ததற்காக “அமைதிக்கான நோபல் பரிசு”க்கு பிரதமர் மோடியின் பெயரை தமிழிசை பரிந்துரை செய்துள்ளார். இதேபோன்று அவரது கணவரும், சிறுநீரகவியல் நிபுணருமான மருத்துவர் சவுந்தர ராஜனும் மோடியின் பெயரை நோபல் பரிசுக்கு பரிந்துரை செய்துள்ளார்.
இதுகுறித்து தமிழிசை வெளியிட்டுள்ள அறிக்கையில் கோடிக்கணக்கான ஏழை மக்களுக்கு பலன் அளிக்கும் திட்டத்தை பிரதமர் மோடி கொண்டு வந்துள்ளார். அரசின் உதவியுடன் செயல்படுத்தப்படும் உலகிலேயே மிகப்பெரும் சுகாதார திட்டம் இது. இந்த திட்டத்தின் கீழ் பலன் பெறுவோரின் எண்ணிக்கை கனடா, மெக்சிகோ மற்றும அமெரிக்க நாட்டில் உள்ள மக்கள் தொகையை விட அதிகம் என்று குறிப்பிட்டுள்ளார்.
நோபல் பரிசுக்கான பரிந்துரை இந்த மாதத்தில் இருந்து தொடங்கியது. அடுத்த ஆண்டு ஜனவரி வரை நோபல் பரிசுக்கு பெயர்களை பரிந்துரை செய்யலாம்.
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)