நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், தேசிய கட்சிகள் கூட்டணிக்கு தயாராகி வருகிறது. இதற்காக பல்வேறு மாநிலங்களில் உள்ள கட்சி நிர்வாகிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி வீடியோ கான்ஃபரன்சிங் மூலம் உரையாடி வருகிறார்.
இதன் ஒரு பகுதியாக நேற்று தமிழக பாஜக நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். அப்போது கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, தமிழகத்தில் கூட்டணிக்கான கதவுகள் திறந்தே இருக்கின்றன. எங்கள் கூட்டணியில் இருந்து வெளியே சென்றவர்களும் எங்களுடன் இணையலாம். கூட்டணியை பொறுத்தவரை வாஜ்பாய் காட்டிய வழியை பாஜக பின்பற்றும். கூட்டணி அமைப்பது குறித்து திறந்த மனதுடன் இருக்கிறோம் என கூறினார்.
இதனையடுத்து, ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி வைப்போம் என்றும், தமிழகத்தில் ஆரோக்கியமான அரசியல் இல்லை என்றும், அக்கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறினார்.
இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் கடம்பூர் ராஜு, தமிழகத்தில் தாமரை ஒருபோதும் மலரப்போவது இல்லை. தமிழகத்தில் பாஜக ஏதாவது ஒரு தொகுதியில் டெபாசிட் அல்லது நோட்டாவை விட அதிக வாக்குகள் பெற்றால் நல்லது. அதிமுக ஆட்சி குறித்து தமிழிசை சான்றிதழ் அளிக்க தேவையில்லை என்று கூறினார்.