This Article is From Jan 12, 2019

‘திமுக-வை நாங்க கூப்டோமா..?’- ஸ்டாலினை சீண்டும் தமிழிசை

மோடியின் கருத்துக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டு எதிர்வினை ஆற்றியுள்ளார்

‘திமுக-வை நாங்க கூப்டோமா..?’- ஸ்டாலினை சீண்டும் தமிழிசை

நேற்று பாஜக-வினர் மத்தியில் வீடியோ மூலம் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, தேர்தலில் கூட்டணி அமைப்பது குறித்துப் பேசினார். மோடி பேசுகையில், ‘நமது பழைய நண்பர்களை வரவேற்போம். திறந்த மனதுடனேயே இருப்போம்' என்று பேசினார். இது மோடி, திமுக-விற்கு விட்ட தூது என்று பரவலாக பேசப்பட்டது. மோடியின் இந்த கருத்துக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டு எதிர்வினை ஆற்றியுள்ளார். ஸ்டாலின் மோடியை வரிந்துக்கட்டிக் கொண்டு விமர்சித்ததால், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்திரராஜன் திமுக-வை கண்டித்துள்ளார்.

ஸ்டாலின் தனது அறிக்கையில், ‘வாஜ்பாய் கலாசாரத்தைப் பின்பற்றி நம்முடைய பழைய நண்பர்களை வரவேற்க நாம் எப்போதுமே தயாராக இருக்கிறோம். கூட்டணிக்கான கதவுகள் திறந்தே இருக்கின்றன' என்று பிரதமர் நரேந்திர மோடி, தமிழகத்தில் உள்ள தனது கட்சி நிர்வாகிகளுடன் காணொலிக் காட்சியில் பேசும்போது குறிப்பிட்டுள்ளது வியப்பாகவும் விசித்திரமாகவும்இருக்கிறது.

பிரதமர் நரேந்திர மோடி வாஜ்பாயும் அல்ல - அவர் தலைமையில் உள்ள தேஜகூ வாஜ்பாய் உருவாக்கியது போன்றதொரு ஆரோக்கியமான கூட்டணியும் அல்ல. முன்பு எந்தப் பிரதமரும் ஆட்சிசெய்த போது இல்லாத அளவிற்கு தமிழக உரிமைகள் பறிக்கப்பட்டது பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில்தான் என்பதை தமிழக மக்கள் என்றைக்கும் மறக்க மாட்டார்கள். நரேந்திர மோடி தலைமையிலான பாஜக-வுடன் திமுக ஒருபோதும் கூட்டணி வைக்காது என்பதை மீண்டும் ஆணித்தரமாக விளக்கிட விரும்புகிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.

ஸ்டாலினின் கருத்துக்கு தமிழிசை, ‘பிரதமர் நரேந்திர மோடி, கூட்டணி குறித்து கருத்து கூறியது பொதுவாகத்தான். அவர், ஒற்றைக் கருத்துடைய கட்சிகளுக்கு அழைப்பு விடுத்தார். அதற்கு ஏன் திமுக கொந்தளிக்க வேண்டும்?

திமுக-தான் காங்கிரஸுடன் ஒற்றுமையாக போய்க் கொண்டிருக்கிறதே. பிறகு ஏன் அவர்களுக்கு இந்தப் பதற்றம். ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன் மொழிந்ததே திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்தான். அப்படியிருக்கையில், பாஜக ஒரு அறிவிப்பு வெளியிட்டால் அது ஏன் திமுக-வுக்குப் பிரச்னையாக இருக்கிறது. பிரதமர் மோடி, மிக கண்ணியத்துடன் நடந்து கொண்டார். ஆனால், ஸ்டாலினுக்கு அப்படிச் செய்யவில்லை' என்று கூறியுள்ளார்.

.