திட்டமிட்டபடி எந்த மாற்றமும் இன்றி தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி வரும் 19-ம்தேதி வெளியிடப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் 12-ம் வகுப்புக்கான பொதுத் தேர்வு கடந்த மார்ச் 1-ம்தேதி தொடங்கி 19-ம்தேதி வரைக்கும் நடைபெற்றது. இதன்பின்னர் விடைத் தாள்களை திருத்தும் பணியில் ஆசிரியர்கள் ஈடுபட்டனர்.
இதன் தொடர்ச்சியாக தேர்தல் பணிகளில் ஆசிரியர்கள் ஈடுபட்டதால், 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் சரியான நேரத்தில் வெளிவருமா என்ற கேள்வி எழுந்தது. இந்த மதிப்பெண்களின் அடிப்படையில்தான் மாணவர்கள் கல்லூரியில் சேர்வது உள்ளிட்ட அடுத்த கட்ட நடவடிக்கைகள் இருக்கிறது என்பதால், இந்த விவகாரம் முக்கியமாக பார்க்கப்பட்டது.
இந்த நிலையில், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், திட்டமிட்டபடி வரும் 19-ம் தேதியன்று தேர்வு முடிவுகள் வெளியாகும் என கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது-
இந்த ஆண்டு 2,3,4,5,7,8,10,12 ஆகிய வகுப்புகளுக்கு பாடத்திட்டங்களை உருவாக்கி தமிழக அரசு வரலாற்றை படைக்கவிருக்கிறது. தேர்வு முடிவுகள் உரிய நேரத்தில் வெளி வருமா என்ற சந்தேகம் சிலருக்கு இருக்கிறது. இதில் சந்தேகமே வேண்டாம். திட்டமிட்டபடி தேர்வு முடிவுகள் 19-ம்தேதி காலை 10 மணிக்கு அறிவிக்கப்படும். செல்போன் வாயிலாகவும் தேர்வு முடிவுகளை பெற்றுக் கொள்ளலாம்.
இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)