This Article is From Jun 29, 2019

ஊடக விவாதங்களில் கலந்து கொள்ள அதிமுகவினருக்கு அனுமதி!! தலைமை கழகம் அறிவிப்பு!

அதிமுகவில் ராஜன் செல்லப்பா பிரச்னையை கிளப்பியதை தொடர்ந்து, அதிமுகவினர் ஊடக விவாதங்களில் பங்கேற்பதற்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டது.

ஊடக விவாதங்களில் கலந்து கொள்ள அதிமுகவினருக்கு அனுமதி!! தலைமை கழகம் அறிவிப்பு!

ஜூலை 1-ம்தேதி முதல் ஊடக விவாதங்களில் அதிமுகவினர் கலந்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ஊடக விவாதங்களில் அதிமுகவினர் பங்கேற்பதற்கு அனுமதி வழங்கி அக்கட்சியின் தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த தகவலை துணை முதல்வரும், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளருமான ஓ. பன்னீர் செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

அதிமுகவில் ஒருங்கிணைப்பாளராக துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் இருந்து வருகின்றனர். கட்சியின் கட்டுப்பாடு 2 நபர்களிடம் இருப்பதாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. ஒற்றைத் தலைமைதான் ஒரு கட்சிக்கு நல்லது என்பது போன்ற கருத்துகள், அதிமுக தலைமைக்கு எதிராக எழுந்தன. 

குறிப்பாக மதுரை வடக்கு தொகுதி எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா, இந்த விவகாரத்தை பொது வெளியில் எழுப்பினார். கட்சித் தலைமை பொறுப்பில் இருப்பது யார் என்று அவர் கூறியது தமிழக அரசியலில் பரபரப்பை கிளப்பியது. இதுதொடர்பாக நடைபெற்ற ஊடக விவாதங்கள் அதிமுக கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தின. 

இதையடுத்து, ஒற்றைத் தலைமை விவகாரம் குறித்து யாரும் பேசக்கூடாது என்றும், தலைமையை விமர்சித்து கருத்து தெரிவிக்க கூடாது என்றும் அதிமுக தலைமை உத்தரவிட்டது. இதன் தொடர்ச்சியாக ஊடக விவாதங்களில் பங்கேற்க அதிமுகவினருக்கு தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் தடையை நீக்கி அதிமுக ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். 

இதையடுத்து ஜூலை 1-ம்தேதியில் இருந்து அதிமுக சார்பாக ஊடக விவாதங்களில் அக்கட்சியை  சேர்ந்தவர்கள் பங்கேற்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

.