This Article is From Jan 07, 2020

''சட்டப்பேரவையில் சடங்கு, சம்பிரதாயத்திற்காக நடைபெற்ற ஆளுநர் உரை'' - ஸ்டாலின் விமர்சனம்!!

நடுநிலையோடு எந்தக் கோணத்தில் பார்த்தாலும், யாருக்கும் பயன்படாத, அ.தி.மு.கவினர்க்கு மட்டுமே பயன்படுகிற, பொல்லாத - ஒருதலை ஆட்சியே இங்கே நடக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள முடியும் என்று திமுக தலைவர் விமர்சித்துள்ளார்.

Advertisement
தமிழ்நாடு Edited by

சட்டமன்ற கூட்டத்திலிருந்து ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் இன்று வெளிநடப்பு செய்தனர்.

தமிழக சட்டமன்றத்தில் ஆளுநர் உரையை புறக்கணித்து திமுகவினர், மு.க.ஸ்டாலின் தலைமையில் வெளிநடப்பு செய்தனர். இதன்பின்னர், ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையில், அதிமுக ஆட்சி குறித்தும், ஆளுநர் உரை தொடர்பாகவும் கடுமையாக விமர்சித்துள்ளார். 

ஸ்டாலின் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது- 

“எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அ.தி.மு.க ஆட்சியின் இந்த மூன்றாண்டு காலம் தமிழகத்தின் மிக இருண்ட காலம்.

Advertisement

இந்த ஆட்சியில், முதலமைச்சரே ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி இருக்கிறார். அவர் மட்டுமல்ல; ‘முதலமைச்சர் எவ்வழி எங்களுக்கும் அவ்வழி' என்று, துணை முதல்வர், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர், உள்ளாட்சித்துறை அமைச்சர், மின்துறை அமைச்சர் உள்ளிட்ட அனைத்து அமைச்சர்களும் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி, தினந்தோறும் ஊழலிலேயே குளித்துத் திளைத்து வருகின்றனர். நுனி முதல் அடிவேர் வரை ஊழல் பாய்ந்தோடுவதால், மாநில நிர்வாகம் எனும் விருட்சம் உளுத்து, வலுவிழந்து, மக்களுக்கு ஒன்றுக்கும் உதவாத ஒதியமரமாகி விட்டது.

கொடநாடு முதல் குட்கா வரை, ஈரோடு - கரூர் முதல் தலைமைச் செயலகம் வரை, செய்யாதுரை முதல் சேகர் ரெட்டி வரை, எங்கும் ரெய்டுகள், ரெய்டுகள், ரெய்டுகள், கணக்கற்ற ரெய்டுகள். “ரெய்டுகள்”என்பது நாள்தோறும் நடக்கும் சகஜ நிகழ்வாகி, மாநிலமே அவமானத்தால் கூனிக் குறுகிவிட்டது.

Advertisement

4 லட்சம் கோடி ரூபாய் கடன், 5 லட்சம் குற்றங்கள்- என கடன் சுமை எப்போதும் இல்லாதபடி ஏறியும், குற்றங்கள் பெருகியும் கூட, அது குறித்துக் கிஞ்சிற்றும் கலங்காமல், கடுகளவும் கவலைப்படாமல், ‘என் கடன் ஊழல் செய்து நாளைக் கழிப்பதே' என்ற பாணியில் பொல்லாத ஆட்சி ஒன்று இங்கே பொழுதைக் கழித்துக் கொண்டிருக்கிறது.

நீட் தேர்வில் இரட்டை வேடம்; தொழில் வளர்ச்சி இல்லை; சட்டம்-ஒழுங்கு சரியாகப் பேணப்படவில்லை; வேலையில்லாமல் இருக்கும் 90 லட்சம் இளைஞர்களின் எதிர்காலத்துக்கு உத்தரவாதம் இல்லை; அறிவிப்புகளை முழுமையாக நிறைவேற்றும் அக்கறை இல்லை; விவசாயிகளுக்கும், நெசவாளர்களுக்கும், மீனவர்களுக்கும், அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், இந்த ஆட்சியில் நிறைவோ, நிம்மதியோ இல்லை.

Advertisement

மதச் சார்பின்மைக்கு வேட்டு வைத்து - நாட்டில் பிளவுண்டாக்கும், மத்திய பா.ஜ.க அரசின் குடியுரிமை திருத்தச் சட்ட மசோதாவுக்கு ஓட்டளித்து, அது நிறைவேறக் காரணமாகி; சிறுபான்மை இஸ்லாமியர்க்கும், இந்துக்களான ஈழத் தமிழர்களுக்கும் துரோகம் இழைத்து; தவறுகளுக்கெல்லாம் உச்சகட்டத் தவறு இழைத்துவிட்டது எடப்பாடி அ.தி.மு.க.

நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில், மாநிலத் தேர்தல் ஆணையம்- காவல்துறை உள்ளிட்ட அரசுத் துறைகள் - அ.தி.மு.க எனும் முக்கோணக் கூட்டணி அமைத்து; அராஜகம், அதிகார துஷ்பிரயோகம், அனைத்து விதமான தேர்தல் தில்லு முல்லுகளிலும் ஈடுபட்டது இந்த அரசு.

Advertisement

நடுநிலையோடு எந்தக் கோணத்தில் பார்த்தாலும், யாருக்கும் பயன்படாத, அ.தி.மு.கவினர்க்கு மட்டுமே பயன்படுகிற, பொல்லாத - ஒருதலை ஆட்சியே இங்கே நடக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

மக்கள் நலனில் எப்போதும் ஏனோதானோவென நடந்து வரும் இப்படிப் பட்ட எதிர்மறை ஆட்சியில்; “ஊழல் என்பதே நோக்கம், பா.ஜ.க அரசின் பாதந் தாங்குவதே பரம சுகம்”- என்று நடக்கும் அ.தி.மு.க ஆட்சியில்; ஏதோ சடங்குக்காகவும், சம்பிரதாயத்திற்காகவும் நடக்கும் இந்த ஆளுநர் உரையினால் நாட்டில் எந்தவிதத் தாக்கமும் எள்ளளவும் ஏற்பட்டுவிடப் போவதில்லை. எனவே அந்த உரையைப் புறக்கணித்து பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்திருக்கிறோம்.

Advertisement

இவ்வாறு ஸ்டாலின் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement