தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல மசோதா 2020, சட்டமன்றத்தில் இன்று நிறைவேற்றப்பட்டது
தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு தடை விதிக்கும் தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல மசோதா 2020, சட்டமன்றத்தில் இன்று நிறைவேற்றப்பட்டது.
இந்த சட்ட முன்வரைவு நிலத்தை தோண்டி கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, நிலக்கரி, மீத்தேன் போன்றவற்றை காவிரி டெல்டா பகுதியில் எடுப்பதற்கு தடை விதிக்கிறது. மேலும், காவிரி டெல்டா பகுதியில் விவசாயத்தை மேம்படுத்துவதற்கு முதல்வர் தலைமையிலான குழுவுக்கு மசோதா அதிகாரம் அளிக்கிறது.
முதல்வர் தலைமையிலான இந்த குழு உணவு உற்பத்தி மற்றும் பாதுகாப்புக்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.
இதற்கிடையே மசோதாவை வரவேற்றுள்ள திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், அதனை தேர்வுக்குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்று கோரி வெளிநடப்பு செய்தன. சட்டமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல் உள்ளதாக கூறி, அதனை தேர்வுக்குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
மசோதா நிறைவேற்றம் குறித்து சட்டமன்றத்தில் பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, 'வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மசோதாவை நிறைவேற்றியுள்ளோம்' என்று கூறியுள்ளார்.
மசோதாவின்படி, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் எந்தவொரு நபரும் புதிய திட்டங்களை நிறைவேற்ற முடியாது. நிலக்கரி, மீத்தேன், இயற்கை எரிவாயு, துத்தநாக ஆலை, இரும்பு ஆலை, ஒருங்கிணைக்கப்பட்ட ஸ்டீல் அலை, காப்பர் ஆலை, அலுமினிய ஆலை போன்ற எந்தவொரு திட்டங்களையும் இந்த பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் கொண்டுவர முடியாது என்று மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.