இன்று மதியம் 12 மணியளவில், தமிழக அமைச்சரவைக் கூட்டம் கூடுகிறது. தலைமைச் செயலகத்தில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கூடும் இந்தக் கூட்டத்தில், பல்வேறு முக்கியப் பிரச்னைகள் குறித்து கலந்தாலோசிக்கப்படும் என்று தெரிகிறது.
சில நாட்களுக்கு முன்னர் தேசிய பசுமைத் தீர்ப்பாயம், வேதாந்தா நிறுவனத்தின் ஸ்டெர்லைட் ஆலையை 3 வாரத்திற்குள் திறக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு மதுரைக் கிளை சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. ஸ்டெர்லைட் விவகாரம் தொடர்ந்து விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில், அது குறித்து இன்றைய கூட்டத்தில் முக்கிய முடிவெடுக்கப்படும் என்று தெரிகிறது.
அதைப் போலவே, மேகதாதுவில் கர்நாடகா அணை கட்ட தொடர்ந்து மும்முரம் காட்டி வருகிறது. இது குறித்தும் தமிழக அரசின் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து பேசப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், எழுவர் விடுதலை விவகாரம், உலக முதலீட்டாளர் மாநாடு குறித்தும் இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் எனப்படுகிறது.