மக்களவை தேர்தல் வெற்றி குறித்து சட்டசபையில் காரசார விவாதம் நடைபெற்றது.
நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அளித்து திமுக மக்களவை தேர்தலில் அதிக இடங்களை கைப்பற்றியுள்ளதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார். இது போலியான வெற்றி என்றும் வரும் தேர்தலில் உண்மையான வெற்றியை மக்கள் தங்களுக்கு அளிப்பார்கள் என்றும் அவர் கூறினார்.
சட்டமன்றத்தில் இன்று கைத்தறி மற்றும் ஜவுளித்துறை மானியக் கோரிக்கை மீதான விவானத்தின்போது பேசிய திமுக உறுப்பினர் சுந்தர், 'மக்களவை தேர்தலில் தமிழகத்தில் 37 இடங்களையும் பாண்டிச்சேரி தொகுதியையும் மொத்தம் 38 இடங்களை கைப்பற்றி நாட்டிலேயே 3-வது பெரும் கட்சியாக திமுக மாறியுள்ளது.
இந்த இடம் அதிமுகவிடம் இருந்து பறிக்கப்பட்டிருக்கிறது. 1967-ல் அண்ணா ஆட்சியை பிடித்தார். அவரை பின்பற்றி வந்த கருணாநிதி 1971 சட்டசபை தேர்தலில் 184 தொகுதிகளை கைப்பற்றினார். அதே வழியில் திமுக தலைவர் ஸ்டாலினும் வெற்றிகளை குவித்து வருகிறார்' என்றார்.
இதற்கு பதிலளித்த தமிழக முதல்வரும், அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி, '2017 ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் திமுக டெபாசிட்டை இழந்தது. நம்ப முடியாத, நடைமுறைக்கு சாத்தியமாகாத, பொய்யான வாக்குறுதிகளை அளித்து திமுக அதிக இடங்களை கைப்பற்றியுள்ளது. இது போலியான வெற்றி. உண்மையான வெற்றியை அடுத்த தேர்தலில் மக்கள் அதிமுகவுக்கு தருவார்கள்' என்றார்.
மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், 'தேர்தலில் வெற்றி தோல்வி ஏற்படுவது சகஜம்தான். இது தற்காலிக பின்னடைவு. தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றட்டும். அதற்கு எப்படியும் மத்திய பட்ஜெட்டுக்கு இணையாக ரூ. 15 லட்சம் கோடி தேவைப்படும்' என்றார்.