உதயநிதியின் (UdhayanidhiI அதிகாரபூர்வ ட்விட்டர் கணக்கையும் பாஜக (BJP), டேக் செய்துள்ளது.
சென்னை, பெரியார் திடலில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் திமுக-வின் (DMK) இளைஞரணிச் செயலாளுரும், மு.க.ஸ்டாலினின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் (Udhayanidhi Stalin, உரையாற்றினார். அவர் துண்டுச்சீட்டு ஒன்றில் குறிப்புகள் எடுத்துக் கொண்டே அந்த உரை முழுவதையும் பேசினார். இதை கவனித்த தமிழக பாஜக (BJP), தனது ட்விட்டர் மூலம் இதைச் சுட்டிக்காட்டி #துண்டுசீட்டு2.0 என்று உதயநிதியை கேலி செய்துள்ளது. உதயநிதியின் அதிகாரபூர்வ ட்விட்டர் கணக்கையும் பாஜக, டேக் செய்துள்ளது.
முன்னதாக தமிழக பாஜக தலைவர்கள், மு.க.ஸ்டாலின் துண்டுச் சீட்டைப் பார்த்துப் பேசுவதை கேலி செய்தனர். அதற்கு ஸ்டாலின், “எல்லாரும் தமிழிசை போல, எச்.ராஜா போல வாய்க்கு வந்ததையெல்லாம் பேச முடியாது. ஆதாரத்தோடுதான் பேச வேண்டும். அதற்கு துண்டுச் சீட்டுக் குறிப்புகளை பயன்படுத்துவதில் என்ன தவறு உள்ளது. இது குறித்தெல்லாம் சர்ச்சை ஏற்படுத்துவதில் இருந்து பாஜக-வினரின் தராதரம் தெரிகிறது” என்று பதிலடி கொடுத்தார்.
உதயநிதி ஸ்டாலின் நிகழ்ச்சியில் ஆற்றிய உரையின்போது, “1927 ஆம் ஆண்டு, சங்கராச்சாரியாரைப் பார்க்க மகாத்மா காந்தி வந்தார். அப்போது, அவரை வீட்டுக்குள் நுழையவிட்டால் தீட்டு வந்துவிடும் என்பதால், மாட்டுக் கொட்டகையில் வைத்து ஆசி வழங்கினார். இந்த சம்பவம் நடக்கும்போது மகாத்மா காந்திக்கு வயது, 58. சங்கராச்சாரியாருக்கு வயது, 34. ஒரு மகாத்மாவுக்கு இந்த நிலைமை என்றால் சாதாரண ஆத்மாக்களான நம் நிலைமை என்ன?
இதை ஏன் இப்போது சொல்கிறேன். 1927 ஆம் ஆண்டில் இதை நடந்ததாக பார்க்க வேண்டாம். இப்போதும் அதே நிலைமைதான். முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சங்கராச்சாரியாரைப் பார்க்க சென்றால் எங்கு அமர்வார். அல்லது எங்கு அமரவைக்கப்படுவார். சுப்ரமணியன் சுவாமி சங்கராச்சாரியாரைப் பார்க்க சென்றால் அவர் எங்கு அமர்வார். அல்லது, எங்கு அமரவைக்கப்படுவார். இந்த பாகுபாட்டில் இருக்கும் உண்மை தெரிகிறதா இல்லையா?” எனப் பேசினார். இப்படிப் பேசும்போதுதான், அவர் துண்டுச் சீட்டுக் குறிப்பைப் பார்த்துப் பேசினார்.
பாஜக பதிவிட்ட ட்வீட்டிற்குக் கீழ், பலர் உதயநிதியின் இந்தக் கருத்தை மேற்கோளிட்டு, ‘இதற்கு பதில் சொல்லாமல் ஒதுங்குவது ஏன்?' என்றும் கேள்வியெழுப்பினார்கள்.