நாளை சட்ட மசோதா தாக்கல் செய்யப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்ததற்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
சேலம் மாவட்டம் தலைவாசலில் ஒருங்கிணைந்த கால்நடைப் பூங்காவுக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்ற தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி,
காவிரி டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக மாற்றப்படும். இதுதொடர்பாக சிறப்புச் சட்டம் கொண்டு வரப்படும். விவசாயிகள் படும் துயரத்தைக் கவனத்தில் கொண்டு இதை நான் அறிவிக்கிறேன். காவிரி டெல்டாவில் மீத்தேன் எடுப்பதற்கு அனுமதிக்க முடியாது. விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் எந்த திட்டத்தையும் தமிழக அரசு கொண்டு வராது.
காவிரி டெல்டா பகுதியில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு திமுகதான் ஒப்பந்தம் போட்டது. இந்த ஒப்பந்தம் ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது.
தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர்களைப் பற்றி திமுகவினர் பொய் பிரசாரங்களைச் செய்து வருகின்றனர். அவர்கள் என்னதான் பிரசாரம் செய்தாலும் அதிமுகவை ஒன்றும் செய்ய முடியாது.
நெடுவாசலில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அவதூறு பரப்புகின்றனர். முதல்வர், அமைச்சர்களைப் பற்றிப்பேசி அவர்கள் ஆதாயம் பெற முயல்கின்றனர் என்று பேசியிருந்தார்.
இதனை விமர்சித்த எதிர்க்கட்சிகள், காவிரி டெல்டாவை சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிப்பது தொடர்பாகச் சிறப்புத் தீர்மானத்தைச் சட்டமன்றத்தில் கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தினர். இதற்கிடையே, தமிழகத்தில் குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிரான போராட்டங்கள் தீவிரம் அடைந்துள்ளன.
இத்தகைய பரபரப்பான சூழலில் தமிழக அமைச்சரவை கூட்டம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று கூடியது. இந்த கூட்டத்தில் காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்ததற்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இதுதொடர்பாக அடுத்த கட்ட சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக 5 பேர் கொண்ட குழுவை அமைப்பதற்கும் தமிழக அமைச்சரவை ஒப்புதல் தந்திருக்கிறது.
காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல பகுதி தொடர்பாக, நாளை சட்டமன்றத்தில் சட்ட மசோதா தாக்கல் செய்யப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.