நிதியுதவி அறிவிப்பை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார்.
ஹைலைட்ஸ்
- காஷ்மீர் தீவிரவாத தாக்குதலில் தமிழக வீரர்கள் 2 பேர் உயிரிழந்துள்ளனர்
- தூத்துக்குடியை சேர்ந்த சுப்ரமணியன் அரியலூரை சேர்ந்த சிவச்சந்திரன் பலி
- இருவரின் குடும்பத்திற்கு தலா ரூ. 20 லட்சம் இழப்பீடு அறிவிப்பு
ஜம்மு காஷ்மீர் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த தமிழக வீரர்கள் 2 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ. 20 லட்சத்தை உடனடியாக வழங்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
ஜம்மு காஷ்மீரில் புல்வாமா மாவட்டத்தில் நேற்று தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் தமிழக 2 பேர் உயிரிழந்தனர். அவர்களுக்கு இழப்பீடு அறிவித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது-
ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் தூத்துக்குடி மாவட்டம், கோவில் பட்டி வட்டம், சவலப்பேரி கிராமத்தை சேர்ந்த கணபதி என்பவரின் மகன் ஜி. சுப்ரமணியன் மற்றும் அரியலூர் மாவட்டம் கார்குடியை சேர்ந்த சின்னையன் என்பவரின் மகன் சிவச்சந்திரன் ஆகிய 2 வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.
இந்த செய்தி எனக்கு மிகுந்த மன வேதனையை அளித்தது. இந்த தாக்குதலில் உயிரிழந்த மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் சுப்ரமணியன், சிவச்சந்திரன் ஆகியோரை இழந்து வாடும் அவர்களது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்த மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் சுப்ரமணியன், சிவச்சந்திரன் ஆகியோரின் குடும்பத்திற்கு தலா ரூ. 20 லட்சத்தை உடனடியாக வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் படிக்க : தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து ஜம்மு காஷ்மீரில் ஊரடங்கு உத்தரவு