This Article is From Feb 18, 2020

'சமூக நல்லிணக்கத்தைக் காப்பாற்ற ஒத்துழைக்க வேண்டும்' - இஸ்லாமியர்களுக்கு முதல்வர் வேண்டுகோள்!!

சென்னை வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகத் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. இங்கு போலீசார் நடத்திய தடியடியைத் தொடர்ந்து, அதனைக் கண்டித்து மாநிலத்தின் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் வெடித்தன.

Advertisement
தமிழ்நாடு Written by

வண்ணாரப்பேட்டை சம்பவம் தொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழக சட்டமன்றத்தில் இன்று விளக்கம் அளித்தார்

சமூக நல்லிணக்கத்தைக் காப்பாற்ற ஒத்துழைக்க வேண்டும் என்றும், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் போராட்டம் நடத்தி வரும் இஸ்லாமியர்களிடம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை வைத்துள்ளார்.

சென்னை வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகத் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. இங்கு போலீசார் நடத்திய தடியடியைத் தொடர்ந்து, அதனைக் கண்டித்து மாநிலத்தின் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் வெடித்தன.

இந்த நிலையில், வண்ணாரப்பேட்டை சம்பவம் தொடர்பாகத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழகச் சட்டமன்றத்தில் இன்று விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது-

சென்னை வண்ணாரப்பேட்டை கண்ணன்  ரவுண்டானா அருகில், ஆண்களும் இஸ்லாமியப் பெண்களும் அனுமதியின்றி அதிகளவு கூடிக் கோஷமிட்டவாறு போக்குவரத்திற்கும், பொதுமக்களுக்கும் இடையூறாகச் செயல்பட்டனர். அவர்களைக் கலைந்து செல்லும்படி காவல்துறை உயர் அதிகாரிகள் கூறினர். இதற்கு மறுத்து போராட்டத்தைத் தொடர்ந்ததால் கைது செய்வோம் என அதிகாரிகள் எச்சரித்தனர். அதனை மீறிக் காவல் துறையினர் மீது தண்ணீர் பாட்டில், செருப்பு, கற்கள் வீசி கலவரத்தில் ஈடுபட்டனர். 

Advertisement

இந்த கலவரத்தில் ராஜமங்கலம் காவல்நிலைய ஆய்வாளர் ராஜ் குமாருக்கு வலது கையில் காயமும், பெண் காவலர் செல்வி உதயகுமாரிக்கு வலது கன்னம் மற்றும் தோள்பட்டையிலும், மற்றொரு பெண் காவலர் செல்வி கலாவுக்கு வலது கண்ணில் காயமும் ஏற்பட்டு அவர்கள் மருத்துவமனையில் உள் நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவம் நடந்த இடத்திலிருந்து 6 தெருக்கள் தாண்டி வாழ்ந்து வந்த 70 வயது நிரம்பிய பசுருல்லா என்பவர் நோயின் காரணமாக இயற்கை மரணம் அடைந்தார். 

ஆனால் அவர் காவல்துறையின் தடியடியில் இறந்ததாக உண்மைக்கு மாறான வதந்தியைப் பரப்பப்பட்டு அந்த வதந்தியை நம்பி சென்னை மாநகர் மட்டுமல்லாமல் தமிழ்நாட்டின் பல இடங்களில் ஆங்காங்கே இஸ்லாமியர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். வேண்டுமென்ற சில சக்திகளின் தூண்டுதலின் பேரில் இந்த போராட்டங்கள் நடந்துள்ளதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன. ஆகவே பொய் பிரசாரங்களையும், விஷம செயல்களையும் புறந்தள்ளி விட்டு சமூக நல்லிணக்கத்தைக் காப்பாற்ற இஸ்லாமியச் சகோதர, சகோதரிகள் ஒத்துழைக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். 
இவ்வாறு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டமன்றத்தில் பேசினார். 

Advertisement
Advertisement