This Article is From Oct 23, 2019

''குற்றங்களை தடுக்கும் ஆற்றல் தமிழக முதல்வருக்கு துளியும் இல்லை''- மு.க.ஸ்டாலின் கண்டனம்!!

பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களில் 8-வது இடத்திற்குள் தமிழ்நாடு உள்ளது. இந்தத் தோல்விகளுக்காக மட்டுமாவது, போலீஸ் துறையை தன் நேரடிப் பொறுப்பில் வைத்துள்ள முதலமைச்சர் திரு. பழனிசாமி தமிழக மக்களிடம் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

Advertisement
தமிழ்நாடு Posted by

தமிழக சட்டமன்றத்துக்கே முதல்வர் தவறான தகவலை அளித்திருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார் ஸ்டாலின்.

தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் அறிக்கை வெளியாகியுள்ள நிலையில், அது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக அரசை விமர்சித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். ஸ்டாலின் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது-

“இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கிறது” என்று முதலமைச்சர் எடப்பாடி திரு. பழனிசாமி செய்த பச்சைப் பொய்ப்பிரச்சாரத்தின் ஈரம் காய்வதற்குள், தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள 2017-ஆம் ஆண்டிற்கான அறிக்கையில்,

"இந்தியாவில் உள்ள 29 மாநிலங்களில், தமிழகத்தில் மட்டும் 1613 கொலைகள் நடைபெற்று, 'இந்தியாவில் கொலைகள் நடந்த மாநிலங்களின் பட்டியலில் 6-வது மாநிலமாக தமிழ்நாடு உள்ளது என்றும், "நாட்டில் உள்ள 19 மாநகரங்களில் 162 கொலைகள் நடைபெற்று, 'கொலைகள் நடந்த மாநகரங்களின் பட்டியலில்' 4-வது மாநகரமாக சென்னை உள்ளது" என்றும் வெளிவந்திருப்பதன் மூலம், அ.தி.மு.க. ஆட்சியில் சட்டம் - ஒழுங்கு சந்தி சிரிப்பது, தமிழகப் பொதுமக்களுக்கு ஆதாரபூர்வமாகத் தெரிய வந்திருக்கிறது.

தமிழகச் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள காவல்துறையின் கொள்கை விளக்கக் குறிப்பில்; 2016-ல் 1511 கொலைகளும், 2017-ல் 1466 கொலைகளும், 2018-ல் 1488 கொலைகளும் நடந்துள்ளதாக ஒப்புக்கொள்ளப்பட்டுள்ள நிலையில், இந்த மூன்று வருடங்களில் மட்டும் நடைபெற்ற கொலைகளின் எண்ணிக்கை 4465-ஆக உயர்ந்து இருக்கிறது.

Advertisement

தமிழகச் சட்டமன்றத்தில், 2017-ல் 1466 கொலைகள் மட்டுமே நடைபெற்றன என்று கூறி விட்டு, தேசியக் குற்ற ஆவணக் காப்பகத்திற்கு, அதே வருடத்தில் 1613 கொலைகள் நடைபெற்றுள்ளதாக அ.தி.மு.க. அரசு தெரிவித்ததிலிருந்து - தமிழகச் சட்டமன்றத்திற்கே முதலமைச்சர் உண்மையை மறைத்து, தவறான தகவலைத் தந்திருக்கிறார் என்பது தெளிவாகிறது.

கொலையில் மட்டுமல்ல, இந்தியத் தண்டனைச் சட்டப்படியான குற்றங்களிலும் இந்தியாவிலேயே 6-வது மாநிலம்; 'சிறப்பு மற்றும் உள்ளூர் சட்டங்களின்' (SLL Crimes) அடிப்படையிலான குற்றங்களில் இந்தியாவில் தமிழகம் 4-வது மாநிலம்; சட்டவிரோதமாக கூடியதாகப் போடப்பட்ட வழக்குகளிலும், கலவரங்களிலும் இந்தியாவிலேயே தமிழகம் முதன்மை மாநிலம் என்பது, அ.தி.மு.க. ஆட்சியால் தமிழகத்திற்கு ஏற்படுத்தப்பட்டுள்ள மிகப்பெரிய அவமானம் மட்டுமல்ல - அழிக்க முடியாத கறையாகும்.

Advertisement

பட்டியல் மற்றும் பழங்குடியினர் கொலையில் 4-வது மாநிலமாகவும், அவர்களுக்கு எதிரான வன்கொடுமை மற்றும் வன்முறையில் ஏழாவது இடத்திலும் தமிழகம் உள்ளது எனும் தகவல்; அம்மக்களுக்கும் இம்மாநிலத்தில் பாதுகாப்பு இல்லை என்பதை வெளிப்படுத்தியுள்ளது.

பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறையால் (போஸ்கோ) பாதிக்கப்பட்டவர்களில் 8-வது இடத்திற்குள் தமிழ்நாடு உள்ளது. இந்தத் தோல்விகளுக்காக மட்டுமாவது, போலீஸ் துறையை தன் நேரடிப் பொறுப்பில் வைத்துள்ள முதலமைச்சர் திரு. பழனிசாமி தமிழக மக்களிடம் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும்.

Advertisement

ஆகவே, பொய்த் தோற்றத்தை உருவாக்கி - அதை ஊரெல்லாம் ஊர்வலம் விடலாம் என்று நினைக்கும் முதலமைச்சர் பழனிசாமி, இப்போதாவது தனது ஆட்சிக்கு, கொலை போன்ற கொடிய குற்றங்களைத் தடுக்கக் கூடிய ஆற்றல் துளியும் இல்லை என்பதை உணர வேண்டும்.

இவ்வாறு ஸ்டாலின் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். 

Advertisement