செப்டம்பர் 10-ம்தேதி முதல்வர் தமிழகம் திரும்புகிறார்.
தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்க அமெரிக்கா, இங்கிலாந்து, துபாய் நாடுகளுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். முதல்வரின் வெளிநாட்டுப் பயணம் நாளை மறுதினமான ஆகஸ்ட் 28-ம்தேதி தொடங்குகிறது.
இந்தப் பயணத்தின்போது வெளிநாட்டு முதலீட்டாளர்களுடன் முதல்வர் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். அவருடன் அரசு உயர் அதிகாரிகள் உடன் செல்கின்றனர். வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களை சந்திக்கும் நிகழ்ச்சியும் முதல்வரின் பயணத்தில் இடம்பெற்றுள்ளது.
முதலில் இங்கிலாந்து செல்லும் தமிழக முதல்வர் கல்வி வளர்ச்சிக்காக அங்கு கிங்ஸ் கல்லூரியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஏற்படுத்துகிறார். இங்கிலாந்து எம்பிக்களையும் முதல்வர் சந்தித்து பேசவுள்ளார்.
இதன்பின்னர் அமெரிக்காவில் அந்நாட்டு முதலீட்டாளர்கள், தொழிலதிபர்களை உள்ளிட்டோரை சந்தித்து பேசுகிறார். அமெரிக்க பயணத்தை முடித்துக் கொண்டு செப்டம்பர் 7-ம்தேதி முதல்வர் துபாய்க்கு பயணம் மேற்கொள்கிறார்.
அங்கு வர்த்தக தலைவர்கள் மாநாடு நடைபெறுகிறது. அதில் சிறப்பு விருந்தினராக முதல்வர் பழனிசாமி கலந்து கொள்கிறார். வெளிநாட்டுப் பயணங்களை முடித்துக் கொண்டு செப்டம்பர் 10-ம்தேதி முதல்வர் தமிழகம் திரும்புகிறார்.