This Article is From Jun 16, 2020

லடாக் எல்லையில் வீர மரணம் அடைந்த பழனியின் குடும்பத்திற்கு ரூ. 20 லட்சம் இழப்பீடு: முதல்வர்

வீர மரணம் அடைந்த  திரு பழனி அவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறவும், தமிழ்நாடு அரசு சார்பில் மரியாதை செலுத்தவும், இராமநாதபுரம் மாவட்ட ஆட்சி தலைவருக்கு உத்தரவிட்டுள்ளேன் என்று முதல்வர் கூறியுள்ளார்.

லடாக் எல்லையில் வீர மரணம் அடைந்த பழனியின் குடும்பத்திற்கு ரூ. 20  லட்சம் இழப்பீடு: முதல்வர்

லடாக் எல்லையில் சீன ராணுவத்திற்கு எதிராக நடந்த சண்டையில் இந்திய ராணுவ அதிகாரி உள்பட 3 பேர் உயிரிழந்தனர்.

ஹைலைட்ஸ்

  • லடாக் எல்லையில் நடந்த சண்டையில் இந்திய வீரர்கள் 3 பேர் உயிரிழப்பு
  • இராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த ராணுவ வீரர் பழனி வீர மரணம் அடைந்தார்
  • ரூ. 20 லட்சம் இழப்பீடு, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை அறிவிப்பு

லடாக் எல்லையில் சீன ராணுவத்திற்கு எதிராக நடந்த சண்டையில் இந்திய ராணுவ அதிகாரி உள்பட 3 பேர் உயிரிழந்தனர். அவர்களில் இராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த ராணுவ வீரர் பழனியும் ஒருவர் ஆவார். இந்த நிலையில் அவரது குடும்பத்திற்கு ரூ. 20 லட்சத்தை இழப்பீடாக தமிழக அரசு அறிவித்துள்ளது. 

இதுதொடர்பாக  முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது-

இந்தியா - சீனா எல்லையில் லடாக் பகுதியில், இந்திய மற்றும் சீன ராணுவத்திற்கும் இடையே நடந்த மோதலில் இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன். 

இந்த மோதலில் இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை வட்டம், கடுக்கலூர் கிராமத்தை சேர்ந்த திரு. காளி முத்து என்பவரின் மகன் ராணுவ வீரர் தி. கே. பழனி என்பவர் இன்று உயிரிழந்தார் என்ற செய்தி எனக்கு மிகுந்த மன வேதனை அளித்தது.

இரவு, பகல் பாராது தன்னலம் கருதாமல் தியாக உணர்வோடு இந்திய திருநாட்டின் பாதுகாப்பு பணியில் தம்மை அர்ப்பணித்து கொண்டு வீர மரணம் அடைந்த ராணுவ வீர பழனி அவர்களின் குடும்பத்திற்கம், பிற ராணுவ  வீரர்களின் குடும்பத்தினருக்கும் எனது  ஆழ்ந்த இரங்கலையும்,  அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். 

இந்திய திருநாட்டிற்காக தனது இன்னுயிரை தியாகம் செய்த ராணுவ வீரர் பழனி அவர்களது குடும்பத்திற்கு இருபது லட்சம் ரூபாய் உடனடியாக வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன். அன்னாரின் குடும்பத்தில் ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் அரசு வேலை வழங்கவும் நான் உத்தரவிட்டுள்ளேன்.

வீர மரணம் அடைந்த  திரு பழனி அவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறவும், தமிழ்நாடு அரசு சார்பில் மரியாதை செலுத்தவும், இராமநாதபுரம் மாவட்ட ஆட்சி தலைவருக்கு உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது அறிக்கையில் கூறியுள்ளார். 

.