தமிழகம் முழுவதும் கடுமையான தண்ணீர் தட்டுபாடு நிலவி வருகிறது. பெரும்பாலான அணைகள், எரிகள் வறண்டு போய் காட்சியளிப்பதால், இந்த கடும் தட்டுபாடு ஏற்ப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பொய்த்துப் போன பருவமழையைத் தொடர்ந்து சென்னைக்கு நீர் ஆதாரமாக திகழ்ந்து வந்த நீர் நிலைகள் வறண்டு போயின. தற்போதைய நிலவரப்படி சென்னைக்கு 550 மில்லியன் லிட்டர் நீர்தான் வழங்கப்படுகிறது. ஆனால் தேவைப்படுவதோ 800 மில்லியன் லிட்டர் நீர்.
சென்னையில் ஒட்டுமொத்த நீர்நிலைகளில் மொத்த தண்ணீர் இருப்பு தற்போது 1.3 சதவீதம் மட்டுமே உள்ளது. அதாவது, முக்கிய ஏரிகள் முற்றிலும் வறண்ட நிலையில் உள்ளன. சென்னைக்கு அருகே மேலும் ஒரு நீர்நிலையை உருவாக்கும் திட்டம் பல ஆண்டுகளாக கிடப்பிலேயே இருக்கிறது. கடந்த 2015 ஆம் ஆண்டு பெய்த கனமழையின்போது, அனைத்து நீர்நிலைகளிலும் நிரம்பி வழிந்தன.
பல லட்சம் லிட்டர் தண்ணீர் கடலில் கலந்தன. அந்த தண்ணீரை திறம்பட தேக்கி வைக்க அரசு தரப்பில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கடல் நீரை குடிநீராக்கும் புதிய ஆலையையும் திறக்க அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. மாற்று வழிகள் அனைத்தும் இறுதி கட்டத்துக்கு போய்விட்டது. தற்போதைய ஒரே நம்பிக்கை தென்மேற்கு பருவமழை மட்டுமே. அதுவும் தாமதமாகிவிட்டால், நிலைமை இன்னும் மோசமாகிவிடும்.
இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் NDTV-யிடம் கூறும்போது, வீராணம் ஏரியைத் தவிர்த்து திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கும் நீராதாரத்தையும் பயன்படுத்திகிறோம். பருவமழை வரும் வரை நகரின் அடிப்படைத் தேவைக்காக தண்ணீர் தருவதற்கு நாங்கள் முயன்று வருகிறோம் என்று கூறியுள்ளனர்.
இந்நிலையில், தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பிரச்சனைக்கு தீர்வு காண்பது தொடர்பாக தலைமைச் செயலகத்தில் காலை 11 மணிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, ஜெயக்குமார், தங்கமணி மற்றும் வருவாய், பொதுப்பணி, உள்ளாட்சி துறைகளின் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.