This Article is From May 13, 2020

'தமிழகம் இயல்பு நிலைக்கு திரும்புவதற்கான அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்படுகிறது' : முதல்வர்

இன்றைக்கு தமிழகத்திலும், சென்னையிலும் கொரோனா அதிகம் பரவியதற்கு கோயம்பேடு காய்கறி மார்க்கெட்தான் முக்கிய காரணம். கடைசியாக பாதிப்பு அதிகரித்தவுடன், கோயம்பேடு கடைகள் அடைக்கப்பட்டு, அவை திருமழிசைக்கு 10.05.2020-லிருந்து மாற்றப்பட்டு கடைகள் வழக்கமாக நடைபெற்று வருகிறது. 

'தமிழகம் இயல்பு நிலைக்கு திரும்புவதற்கான அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்படுகிறது' : முதல்வர்

இந்தியாவிலேயே மருத்துவ சிகிச்சை அளிப்பதில் தமிழகம்தான் முதன்மை மாநிலமாக இருந்து வருகிறது என்று தமிழக முதல்வர் கூறியுள்ளார்.

ஹைலைட்ஸ்

  • தமிழகம் இயல்பு நிலைக்கு திரும்புவதாக முதல்வர் பழனிசாமி தகவல்
  • மக்கள் அதிக நெருக்கமாக உள்ளதால் சென்னையில் கொரோனா பரவல் அதிகரிப்பு
  • கொரோனா பரவலுக்கு கோயம்பேடு மார்க்கெட் முக்கிய காரணம் என்கிறார் முதல்வர்

தமிழகத்தில் இயல்பு நிலையை கொண்டு வருவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து தமிழக மக்களுக்கு முதல்வர் எடுத்துரைத்தார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது-

இந்தியாவிலேயே மருத்துவ சிகிச்சை அளிப்பதில் தமிழகம்தான் முதன்மை மாநிலமாக இருந்து வருகிறது. கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள் படிப்படியாக குணம் அடைந்து வருகின்றனர். 

சென்னையில் பணிபுரிவோர் ஊரடங்க காலத்தில் தங்களது சொந்த மாவட்டங்களுக்கு திரும்பியுள்ளனர். அவர்களுக்கு பரிசோதனை நடத்தப்பட்டதில் பெரும்பாலானவர்களுக்கு நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தின் மற்ற மற்ற மாவட்டங்களுக்கும் கொரோனா பரவியுள்ளது.

இன்னும் சில நாட்களில் சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு சென்ற அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்படும். 

சென்னை மாநகரில் அதிக மக்கள் வசிக்கின்றனர். 26 லட்சம்பேர் சென்னை மாநகராட்சியின் குடிசைப் பகுதியில் வசிக்கின்றனர். நெருக்கமான பகுதி, குறுகலான தெருக்கள் ஆகியவற்றால் நோய்த் தொற்று அதிகம் ஏற்பட்டுள்ளது. இதேபோன்று ஆசியாவிலேயே மிகப்பெரிய மார்க்கெட்டான கோயம்பேட்டில் நோய்த் தொற்று ஏற்பட்டது. அங்கிருந்து மற்ற சில இடங்களுக்கும் தொற்று பரவியது. கோயம்பேடு மார்க்கெட்டால் தொற்று பரவுவதற்கான வாய்ப்பு உள்ளது என்று ஏற்கனவே எச்சரித்தோம். 

இதனை கோயம்பேடு வியாபாரிகள் ஏற்கவில்லை. தலைமைச் செயலகத்திற்கு அழைத்து கோயம்பேடு வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினோம். வேறு இடத்திற்கு மார்க்கெட்டை மாற்றினால்தான் நோய்த் தொற்று பரவலை தடுக்க முடியும் என்று கூறினோம்.  இழப்பு ஏற்படும் என அஞ்சி அதையும் அவர்கள் ஏற்கவில்லை. மீண்டும் 24-04-2020 அன்றும் இதே கோரிக்கையை வலியுறுத்தினோம். 

காவல்துறை ஆணையர், வேளாண்துறை செயலர் உள்ளிட்டோர் கோயம்பேட்டிற்கே சென்று அறிவுறுத்தினர். இதையும் அவர்கள ஏற்கவில்லை. ஆகவே பலமுறை கோயம்பேடு மார்க்கெட் வியாபாரிகளிடம் பேசினோம். அவர்கள் நஷ்டம் ஏற்பட்டு விடும் என்று கூறி ஒத்துழைக்க மறுத்து விட்டனர்.

இன்றைக்கு தமிழகத்திலும், சென்னையிலும் கொரோனா அதிகம் பரவியதற்கு கோயம்பேடு காய்கறி மார்க்கெட்தான் முக்கிய காரணம். கடைசியாக பாதிப்பு அதிகரித்தவுடன், கோயம்பேடு கடைகள் அடைக்கப்பட்டு, அவை திருமழிசைக்கு 10.05.2020-லிருந்து மாற்றப்பட்டு கடைகள் வழக்கமாக நடைபெற்று வருகிறது. 

வெளி மாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர்களுக்கான டிக்கெட் செலவை அரசே ஏற்பாடு செய்கிறது. குறைந்த ரயில்கள் இயக்கப்படுவதால் வெளி மாநில தொழிலாளர்கள் பொறுமை காக்க வேண்டும்.

வெளி மாநிலத்தில் உள்ள தமிழர்களை படிப்படியாக தமிழகத்திற்கு அழைத்து வந்து கொண்டிருக்கிறோம். தமிழகத்தை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்கான அனைத்து நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மக்கள் கொரோனா குறித்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.வெளியே செல்லும்போது கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும். தனிநபர் இடைவெளியுடன் பொருட்களை வாங்க வேண்டும். அனாவசியமாக வெளியே செல்லக்கூடாது. வெளியே சென்று வீட்டுக்கு வந்தால் கை கால்களை சோப்பு போட்டு கழுவ வேண்டும். இதை செய்தாலே தமிழகத்தில் கொரோனா பரவுதலை தடுக்கலாம். 

இவ்வாறு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். 
 

.