பிரதமர் மோடி, ‘மனதின் குரல்’ வானொலி நிகழ்ச்சியில் மன்னிப்பு கேட்டிருந்தார்.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நேற்று வரை 50 ஆக இருந்தது. இந்நிலையில் இன்று ஒரே நாளில் 17 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.
நேற்று ஈரோட்டில் 8 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாக தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் தெரிவித்திருந்தார். இது குறித்து அவர், “ஈரோட்டில் 8 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. பெருந்துரையில் சில நாட்களாக கொரோனா பாதிப்பு காரணமாக சிகிச்சை எடுத்தவரும் தாய்லாந்து குடிமக்களிடம் இந்த 8 பேரும் தொடர்பில் இருந்துள்ளார்கள். சுகாதாரத் துறை மூலம் அனைவரும் கண்டறியப்பட்டனர். தற்போது அனைவரும் தனிமையில் வைத்து சிகிச்சை அளித்து வருகிறோம்,” என்றார். இந்நிலையில் 17 பேருக்கு கொரோனா தொற்று என்ற அதிர்ச்சித் தகவல் வந்துள்ளது. எந்த ஊரில், யாருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது என்பது குறித்து இதுவரை தகவல் இல்லை.
சர்வதேச அளவில் கொரோனா தொற்று பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருவதையொட்டி பல நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்த நிலையில் இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது ஆயிரத்தைக் கடந்திருக்கிறது.
தற்போது 1024 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பவர்களாக அடையாளம் காணப்பட்டிருக்கிறார்கள். ஆயிரக்கணக்கான இடம் பெயர் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டிருக்கிறது. இதனால் பிரதமர் மோடி, ‘மனதின் குரல்' வானொலி நிகழ்ச்சியில் மன்னிப்பு கேட்டிருந்தார்.
நாட்டில் ஒட்டுமொத்தமாக 27 பேர் இந்த தொற்றால் மரணமடைந்திருக்கின்றனர். தமிழகம், மேற்குவங்கம், கேரளா, தெலுங்கானா, பஞ்சாப், ஜம்மு&காஷ்மீர், இமாச்சல் பிரதேசம், மற்றும் பீகார் மாநிலங்களில் தலா ஒருவரும், மகாராஷ்டிரா மாநிலத்தில் 6 பேரும், மத்தியப் பிரதேசம் 2, கர்நாடகா 3, குஜராத் 4, டெல்லி 2 பேர் என கொரோன பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.