This Article is From Mar 25, 2020

''உங்களையும், குடும்பத்தையும் காப்பாற்றத்தான் இந்த 21 நாள் ஊரடங்கு; இது விடுமுறையல்ல''

தனிமைப்படுத்துதல் என்பது உங்கள் குடும்பத்தையும், நாட்டையும், சமூகத்தையும் பாதுகாப்பதற்காகத்தான். 21 நாட்கள் என்பது விடுமுறையல்ல. உங்களையும், உங்களது குடும்பத்தையும் காப்பாற்றுவதற்காகத்தான் இந்த 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு ஏற்பட்டுள்ளது என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

''உங்களையும், குடும்பத்தையும் காப்பாற்றத்தான் இந்த 21 நாள் ஊரடங்கு; இது விடுமுறையல்ல''

கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து தமிழக மக்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார்.

ஹைலைட்ஸ்

  • தமிழக அரசின் நடவடிக்கைகள் குறித்து வீடியோ பதிவு வெளியிட்டுள்ளார் முதல்வர்
  • 'உங்களைக் காப்பாற்த்தான் ஊரடங்கு உத்தரவு' என்கிறார் முதலமைச்சர்
  • அரசின் உத்தரவை மீறுவோர் பற்றி காவல்துறைக்கு தகவல் அளிக்க கோரியுள்ளார்

''21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு என்பது, உங்களையும், உங்களது குடும்பத்தினரையும் காப்பாற்றிக் கொள்ளத்தான். இது விடுமுறையல்ல'' என்று தமிழக மக்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை செய்துள்ளார். தமிழக மக்களுக்கு முதல்வர் விடுத்துள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது -

அன்பான சகோதர சகோதரிகளே, இந்த நேரத்தில் நான் தமிழக முதலமைச்சராக இல்லாமல் உங்களில் ஒருவனாக உங்கள் குடும்பத்தின் ஒருவனாக பேசுகிறேன்.

உங்கள் அனைவருக்கும் எனது வேண்டுகோள். உலகத்தையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் சீனாவில் தொடங்கி காட்டுத் தீ போல் வேகமாக பரவி வருகிறது. மத்திய அரசின் வேண்டுகோள்படி நாம் 21 நாட்கள் ஊரடங்கை கடைபிடிக்க வேண்டும். 

கொரோனாவை எதிர்கொள்ள 10 ஆயிரத்திற்கும் அதிகமான படுக்கைகளை கொண்ட மருத்துவமனைகள் தயார் நிலையில் உள்ளன. படுக்கை எண்ணிக்கையை அதிகரிக்க உத்தரவிட்டுள்ளேன்.

ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்திற்காக அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 நிதியுதவி வழங்கப்படும். அத்துடன் ஏப்ரல் மாதத்திற்கான அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய், சர்க்கரை ஆகியவை விலையின்றி வழங்கப்படும். 

அம்மா உணவகத்தின் மூலம் சூடான, சுகாதாரமான உணவு தொடர்ந்து வழங்கப்படும்.

அரசு மட்டும் நடவடிக்கை எடுத்தால் போதாது. உங்களது ஒத்துழைப்பும் மிக மிக அவசியம். நோயின் தீவிரத்தை உணர்ந்து நீங்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம். வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் அவர்களாகவே முன்வந்து தங்களை வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். தவறினால் உள்ளாட்சித்துறைக்கோ, காவல்துறைக்கோ அவர்கள் பற்றிய விவரத்தை தெரிவிக்கலாம்.

தனிமைப்படுத்துதல் என்பது உங்கள் குடும்பத்தையும், நாட்டையும், சமூகத்தையும் பாதுகாப்பதற்காகத்தான். உங்கள் குடும்பம் உங்களுக்கு எவ்வளவு முக்கியமோ அதைப்போல தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் அரசுக்கு முக்கியம். இதை மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

21 நாட்கள் என்பது விடுமுறையல்ல. உங்களையும், உங்களது குடும்பத்தையும் காப்பாற்றுவதற்கான அரசின் உத்தரவுதான் இந்த ஊரடங்கு.

அத்தியாவசிய தேவைப் பொருட்களான காய்கறி, பால், இறைச்சி போன்றவை மக்களுக்கு கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சுய மருத்துவம் செய்ய வேண்டாம். காய்ச்சல், சளி, இருமல் இருந்தால் தனியார், அரசு மருத்துவமனையை நாடுங்கள். வெளியே சென்று விட்டு வீடு திரும்பினால் கை,கால்களை கழுவ வேண்டும். 

வீண் வதந்திகளை பரப்புவோர்கள் மீது மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் சட்டப்படி நடவடிக்கை எடுப்பார்கள். 

இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

.