சென்னையில் கொரோனா பரவலின் வேகம் அதிகரித்திருக்கிறது.
ஹைலைட்ஸ்
- தமிழகத்தில் இன்று புதிதாக 508 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது
- மொத்த பாதிப்பு 4,058 ஆக தமிழகத்தில் அதிகரித்திருக்கிறது
- பரிசோதனை அதிகரிப்பு பாதிப்பு உயர்வுக்கான முக்கிய காரணம்
தமிழகத்தில் இன்று புதிதாக 508 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 4,058 ஆக உயர்ந்திருக்கிறது.
சென்னையில் மட்டும் இன்று 279 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இன்று பாதிப்பு ஏற்பட்ட 508 பேரில் 353 பேர் ஆண்கள். 154 பேர் பெண்கள். ஒருவர் திருநங்கை ஆவார்.
தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னையில் கொரோனா வைரஸ் பரவல் வேகமெடுத்துள்ளது.
சென்னை கோயம்பேடு சந்தை மூலமாக ஏற்பட்ட கொரோனா தொற்று பரவலால், தினம் தினம் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை எட்டி வருகிறது. இங்கு வருவோருக்கு கொரோனா ஏற்பட்டு அவர்கள் மாநிலத்தின் மற்ற பகுதிகளுக்கு செல்வதால் கொரோனா பரவத் தொடங்கியுள்ளது.
கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 33 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து இன்று 76 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், வைரஸ் பரவியவர்களில் ஆயிரத்து 485 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரிசோதனை மையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. இங்கு 36 அரசு ஆய்வகங்களும், 16 தனியார் ஆயவகங்களும் செயல்பட்டு வருகின்றன.
உயிரிழந்தவர்கள், சிசிக்சை குணம் அடைந்தவர்களை தவிர்த்து மொத்தம் 2,537 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.இன்று மட்டும் 11,858 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன.
தமிழகத்தில் பரிசோதனைகள் அதிகரித்திருப்பதே கொரோனா பாதிப்பு அதிகம் கண்டறியப்பட்டதற்கு முக்கிய காரணமாக உள்ளது.