This Article is From Mar 21, 2019

தினகரன் நாளிதழ் அலுவலக எரிப்பு வழக்கில் 9 பேருக்கு ஆயுள்தண்டனை விதிப்பு

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நடைபெற்று வந்த இந்த வழக்கில் உயிரிழந்த 3 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ. 5 லட்சத்தை இழப்பீடாக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

தினகரன் நாளிதழ் அலுவலக எரிப்பு வழக்கில் 9 பேருக்கு ஆயுள்தண்டனை விதிப்பு

தினகரன் நாளிதழ் அலுவலக எரிப்பில் 3 பேர் உயிரிழந்தனர்.

Chennai:

மதுரையில் தினகரன் நாளிதழ் அலுவலகத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசி நடத்தப்பட்ட தாக்குதலில் 3 பேர் உயிரிழந்தனர். 2007-ம் ஆண்டு நடந்த இந்த சம்பவத்தில் தீர்ப்பு வழங்கியுள்ள சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை குற்றம் சாட்டப்பட்ட 9 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் உயிரிழந்த 3 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 5 லட்சத்தை இழப்பீடாக வழங்கவும் நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.

கடந்த 2007-ம் ஆண்டு திமுக தலைவர் கருணாநிதியின் அடுத்த அரசியல் வாரிசு யார் என்பது பற்றி தினகரன் நாளிதழ் கருத்துக்கணிப்பை வெளியிட்டது. இந்த கருத்துக்கணிப்பு ஸ்டாலினே கருணாநிதியின் அடுத்த அரசியல் வாரிசு என்று கூறியது. இதனால் ஆத்திரம் அடைந்த கருணாநிதியின் மூத்த மகன் அழகிரியின் ஆதரவாளர்கள் வன்முறையில் இறங்கினர்.

இதன் ஒருபகுதியாக மதுரையில் தினகரன் நாளிதழ் அலுவலகத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் அங்கு பணியாற்றிய கோபிநாத், வினோத், முத்துராமலிங்கம் ஆகியோர் உயிரிழந்தனர்.

இந்த வழக்கு முதலில் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அப்போது குற்றம்சாட்டப்பட்ட 17 பேரையும் மதுரை மாவட்ட நீதிமன்றம் கடந்த 2009-ல் விடுதலை செய்தது.

இதையடுத்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள் பிரகாஷ், புகழேந்தி ஆகியோர் குற்றம் சாட்டப்பட்ட அட்டாக் பாண்டி உள்பட 9 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்தனர். அலுவலக எரிப்பு சம்பவத்தில் உயிரிழந்த 3 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 5 லட்சத்தை வழங்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

 

.