மக்களவைக்கு 2-வது கட்டமாக தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 12 மாநிலங்களில் உள்ள 95 தொகுதிகளுக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. தமிழகத்தில் 38 மக்களவைத் தொகுதிகளுக்கும், 18 சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்குமான வாக்குப்பதிவு நடைபெற்றது. இதேபோல் புதுச்சேரி மக்களவைத் தொகுதிக்கும், அங்கு காலியாக இருக்கும் தட்டாஞ்சாவடி சட்டசபை தொகுதிக்கும் ஓட்டுப்பதிவு நடைபெற்றது.
தமிழகத்தில் 22 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மையங்களில் 66,702 வாக்குச்சாவடிகளில் நேற்று வாக்குப்பதிவு நடந்தது. இதில், தமிழகத்தின் 8,293 பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு தீவிர கண்காணிப்புடன் வாக்குப்பதிவு நடைபெற்றது. பல்வேறு இடங்களில் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர்.
ஒரு சில ஓட்டுச்சாவடிகளில் மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்களில் கோளாறு ஏற்பட்டதால் வாக்குப்பதிவு சற்று தாமதமாக தொடங்கியது.
சில வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு நடந்து கொண்டிருந்த போது எந்திரங்களில் கோளாறு ஏற்பட்டதால், வாக்குப்பதிவு பாதிக்கப்பட்டது. அந்த வாக்குச்சாவடிகளில் வாக்களிக்க கூடுதல் நேரம் அனுமதி வழங்கப்பட்டது.
12 மாநிலங்களில் நேற்று நடைபெற்ற தேர்தலில், குறைந்தபட்சமாக காஷ்மீரில் 43.4 சதவிகித வாக்குகளும், அதிகபட்சமாக புதுச்சேரியில் 81.57 சதவிகித வாக்குகளும் பதிவானதாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகம், மேற்கு வங்கம், அஸாம், மனிப்பூர், சத்தீஸ்கர், ஆகிய மாநிலங்கள் 70 சதவிகிதத்திற்கும் மேல் வாக்குப்பதிவை கண்டதாக கூறப்பட்டுள்ளது.
இதேபோல், தமிழகம் முழுவதும் 70.90 சதவீதம் வாக்குகள் பதிவானதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தெரிவித்துள்ளார்.
அதிகபட்சமாக நாமக்கல் மக்களவைத் தொகுதியில் 79.75 சதவீத வாக்குகளும், குறைந்தபட்சமாக தென் சென்னை நாடாளுமன்ற தொகுதியில் 57.43 சதவீத வாக்குகளும் பதிவாகி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தமிழகம் முழுவதும் சராசரியாக 73.68 சதவீத வாக்குகள் பதிவானது குறிப்பிடத்தக்கது.