ஆம்னி பேருந்துகள் அதிக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இன்னும் 6 மாதங்களில் மின்சாரப் பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜய பாஸ்கர் அறிவித்துள்ளார்.
சாலை விபத்துகளை குறைத்தமைக்காக சாலைப் பாதுகாப்பு விருது தமிழக அரசுக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதனை போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் இன்று பெற்றுக் கொண்டார். இதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது-
சாலைப் பாதுகாப்புக்கான விருதை மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங்கும், நிதின் கட்கரியும் தமிழக அரசுக்கு வழங்கியுள்ளனர். இது தேசிய அளவில் விபத்துகளையும், உயிரிழப்புகளையும் குறைத்த முதல் மாநிலம் என்ற பெருமை தமிழகத்திற்கு கிடைத்துள்ளது.
தொடர்ந்து விபத்துகளை குறைத்து இனி வரும் ஆண்டுகளிலும் இதே விருதை வாங்குவதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
புதிய மோட்டார் வாகன சட்டத்தின்படி விதிக்கப்பட்டு வரும் அபராதத் தொகையை குறைக்குமாறு மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளோம். தமிழகத்தில் இன்னும் 6 மாதத்தில் மின்சார பேருந்துகள் இயக்கப்படும். ஆம்னி பேருந்துகள் அதிக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார். தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் சொந்த ஊருக்கு சென்று வர சிறப்பு ஏற்பாடுகளை தமிழக அரசு செய்துள்ளது. கடந்த 10-ம் தேதி முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதற்காக 15 இடங்களில் முன்பதிவு கவுன்ட்டர்கள் அமைக்கப்பட்டன. பொதுமக்கள் அதிகம் செல்வதை பயன்படுத்தி ஆம்னி பேருந்துகள் அதிக கட்டணத்தை வசூலிப்பதாக புகார்கள் எழுந்திருக்கின்றன.