This Article is From Oct 25, 2019

''ஸ்டாலினின் குற்றச்சாட்டுகளை தவிடு பொடியாக்கியுள்ளது இடைத்தேர்தல் வெற்றி'' : ஜெயக்குமார்

உள்ளாட்சி தேர்தல் எப்போது வந்தாலும் சரி, அதனை முழுமையாக இந்த இடைத்தேர்தல் வெற்றியுடன் சந்திப்போம். உள்ளாட்சி தேர்தலில் மட்டும் இல்லாமல், 2021 சட்டமன்ற தேர்தலிலும் மகத்தான வெற்றியை பெறுவோம் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

''ஸ்டாலினின் குற்றச்சாட்டுகளை தவிடு பொடியாக்கியுள்ளது இடைத்தேர்தல் வெற்றி'' : ஜெயக்குமார்

தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார்.

தமிழகத்தில் நடைபெற்ற விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகி வருகின்றன. இதில் அதிமுக வேட்பாளர்கள் வெற்றியின் விளிம்பில் உள்ளனர். இதுதொடர்பாக தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது-

நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக வெற்றி பெறும் நிலையில் உள்ளது. இது ஒவ்வொரு அதிமுக தொண்டனுக்கு மட்டும் இல்லாமல் தமிழக மக்கள் அனைவருக்குமே ஒரு மகிழ்ச்சி கொள்ளத்தக்க செய்தியாகும். 

திமுக தலைவர் ஸ்டாலின் தனது பேச்சில் ஒரு மதவாத, சாதிய இயக்கம் என்றெல்லாம் ஆட்சி மீது குறைகூறி, எண்ணற்ற குற்றச்சாட்டை அடுக்கினார். அவற்றை தவிடு பொடியாக்கும் வகையில் வடக்கில் விக்கிரவாண்டி தொகுதியிலும், தெற்கில் நாங்குநேரியிலும் அதிமுக வெற்றியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

இந்த வெற்றியைப் பார்க்கும்போது 2021-லும் அதிமுக அரசு அமையும் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. தர்மத்திற்கும் - அதர்மத்திற்கும் இடைப்பட்ட போராகத்தான் இந்த இடைத்தேர்தலை பார்க்கிறேன். 

உள்ளாட்சி தேர்தல் எப்போது வந்தாலும் சரி, அதனை முழுமையாக இந்த இடைத்தேர்தல் வெற்றியுடன் சந்திப்போம். உள்ளாட்சி தேர்தலில் மட்டும் இல்லாமல், 2021 சட்டமன்ற தேர்தலிலும் மகத்தான வெற்றியை பெறுவோம். 

இடைத்தேர்தல் வெற்றி என்பது தமிழக மக்களுக்கும், அதிமுக கூட்டணிக்கும் கிடைத்த வெற்றி. பிள்ளைகளுக்கு சாக்லேட் கொடுத்து ஏமாற்றுவது போல நாடாளுமன்ற தேர்தலில் தற்காலிகமாக 37 தொகுதிகளை திமுக பெற்றது. பணநாயகத்திற்கும் ஜனநாயகத்திற்கும் இடையிலான போட்டியில் ஜனநாயகம் நிலை நிறுத்தப்பட்டிருக்கிறது. 

இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். 

.