புகார் தெரிவித்திருக்கும் பெண் உதவி பேராசிரியர், கல்லூரியில் ஒன்றரை ஆண்டுகளாக தங்கியிருந்து கற்பித்து வருகிறார்.
Chennai: சக பணியாளர்களும், கல்லூரி நிர்வாகமும் தன்னை தற்கொலை செய்யும் நிலைக்கு தள்ளுவதாக, சென்னையை சேர்ந்த தனியார் மருத்துவக் கல்லூரியின் உதவி பேராசிரியர் குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக பேஸ்புக்கில் அவர் வெளியிட்டுள்ள வீடியோ பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
பெண் உதவி பேராசிரியர் தனது வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது-
நான் இந்த கல்லூரியில் கடந்த 18 மாதங்களாக தங்கியிருந்து பணி புரிந்து வருகிறேன். என்னை தகாத வார்த்தைகளால் இங்கு சிலர் பேசியுள்ளனர். உடல் ரீதியாகவும் என்னை துன்புறுத்தியுள்ளனர்.
நான் பணியாளர்கள் (ஸ்டாஃப்) அறைக்குச் சென்றால் சீனியர் பணியாளர்கள் என்னை வேண்டுமென்றே தள்ளி விடுவார்கள். நான் மாணவர்களுக்கு முன்பு விழுந்து விடுவேன். இவ்வாறான துன்புறுத்தல்களை நான் அனுபவித்துள்ளேன். இது எனக்கு மிகுந்த மன உளைச்சலை அளித்துள்ளது. என்னை அவர்கள் மிரட்டவும் செய்துள்ளனர்.
சில சமயங்களில் என்னை அறைக்குள் வைத்து வைத்து பூட்டி விடவும் செய்வார்கள். கடந்த 2 வாரங்களாக எனக்கு உணவு ஏதும் தரவில்லை. கடந்த 2 நாட்களாக குடிநீரும் எனக்கு நிறுத்தப்பட்டு விட்டது. உடலளவில் நான் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளேன்.
தயவு செய்து என்னைக் காப்பாற்றுங்கள்; எனக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் தனது வீடியோ பதிவில் கூறியுள்ளார். பெண் உதவி பேராசிரியர் வேலை பார்க்கும் தனியார் கல்லூரி சென்னையில் இருந்து 44 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக கல்லூரியின் டீன் டாக்டர் குணசேகரனை NDTV தொடர்பு கொண்டது. இதற்கு பதில் அளித்த அவர், 'இந்த புகார் தொடர்பாக கமிட்டியை அமைத்துள்ளோம். அதில் உள்ளவர்கள் புகார் அளித்த பெண்ணுடன் பேசியுள்ளனர். புகாரில் உண்மை இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.