நாங்குனேரி சட்டமன்ற தொகுதி காலியாக உள்ளதென அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சட்டமன்ற இடைத்தேர்தல் 22 தொகுதிகளுக்கு நடத்தி முடிக்கப்பட்டுள்ள நிலையில் நாங்குனேரி சட்டமன்ற தொகுதி காலியாக உள்ளதென அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2016 சட்டமன்ற தேர்தலின்போது நாங்குனேரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் எச். வசந்த குமார். காங்கிரசை சேர்ந்த அவருக்கு மக்களவை தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது.
மத்திய இணையமைச்சராக இருந்த பொன் ராதாகிருஷ்ணனனை எதிர்த்து வசந்த குமார் களத்தில் நின்றார். இந்த தேர்தலில் இரண்டரை லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதையடுத்து நாங்குனேரி சட்டமன்ற உறுப்பினர் பதவியை வசந்த குமார் ராஜினாமா செய்தார்.
இந்த நிலையில், நாங்குனேரி தொகுதி காலியாக உள்ளதென்று சட்டப்பேரவை செயலர் சீனிவாசன் அறிவித்துள்ளார். இதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது.