தமிழகத்தில் மே 3-வரை கட்டுப்பாடுகள் நீடிக்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
100 நாட்கள் வேலைத் திட்டத்திற்கு அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. கிராமப்புறங்களில் பொருளாதார நடவடிக்கைகளை ஊக்கப்படுத்தும் விதமாக தமிழக அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் கடந்த மார்ச் 25-ம்தேதி முதல், மே 3-ம்தேதி வரை ஊரடங்கு போடப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஏப்ரல் 20-ம்தேதியில் இருந்து மத்திய அரசு கட்டுப்பாடுகளை தளர்த்தி விவசாயம், குறிப்பிட்ட சில தொழிற்சாலைகள் செயல்படுவதற்கு அனுமதி அளித்தது.
அதே நேரத்தில் மாநிலங்கள் கொரோனா பாதிப்பு நிலைமைகளுக்கு ஏற்ப கட்டுப்பாடுகளை தளர்த்தவோ, அல்லது நீட்டிக்கவோ செய்து கொள்ளலாம் என மத்திய அரசு அனுமதி அளித்திருந்தது.
இதற்கிடையே, தமிழகத்தில் பாதிப்பு ஏதும் குறையாததால் கட்டுப்பாடுகள் ஏதும் தளர்த்தப்பட மாட்டாது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். இந்த நிலையில், கிராமப் பொருளாதாரத்தை ஊக்கப்படுத்தும் வகையில் 100 நாட்கள் வேலைத் திட்டம் செயல்படுவதற்கு அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது. இதனை, தனிநபர் இடைவெளியை கடைபிடித்து மேற்கொள்ள வேண்டும் என்றும் அரசு அறிவுறுத்தியுள்ளது.
இதேபோன்று மத்திய மாநில அரசு அலுவலகங்கள் 33 சதவீத ஊழியர்களைக் கொண்டு இயங்குவதற்கும் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.