இன்று காலை வரைக்கும் அரசு மருத்துவர்களுக்கு கெடு விதிக்கப்பட்டிருந்தது.
பணிக்கு திரும்பாத அரசு மருத்துவர்கள் மீது பணி முறிவு (Break in Service) நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்த நிலையில் போராட்டம் இன்று கைவிடப்பட்டதை தொடர்ந்து, பணி முறிவு உத்தரவு திரும்பப் பெறப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், தமிழக அரசு அறிவித்திருந்த பணி முறிவு (Break in Service) உத்தரவு திரும்பப் பெறப்படுகிறது. மாண்புமிகு முதல்வர் அவர்கள் உறுதியளித்தபடி, அரசு மருத்துவர்களின் நியாயமான கோரிக்கைகளை அரசு கனிவுடன் பரிசீலிக்கும் என்பதை அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவ பணியிடங்களை உயர்த்த வேண்டும், மருத்துவ மேற்படிப்புகளில் இட ஒதுக்கீடு, காலமுறை ஊதிய உயர்வு வழங்குதல், பதவி உயர்வு ஆகிய 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தில் அரசு மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பினர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
சென்னையில், ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் போராட்டம் நடந்தது. பல்வேறு மாவட்டங்களில் போராட்டம் நீடித்ததால், நோயாளிகள் பாதிப்பு அடைந்தனர்.
இதையடுத்து மருத்துவர்கள் பணிக்கு திரும்பாவிட்டால் புதிய மருத்துவர்கள் நியமிக்கப்படுவார்கள் என சுகாதாரத்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்தது. இதன்பின்னர், போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்களை கணக்கெடுக்கும் பணி தொடங்கியது.
இதற்கிடையே வியாழக்கிழமைக்குள் பணிக்கு திரும்பாத மருத்துவர்கள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்று அமைச்சர் விஜய பாஸ்கர் எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்த எச்சரிக்கை சற்று நீட்டிக்கப்பட்டு மருத்துவர்களுக்கு மதியம் 2 மணி வரைக்கும் காலக்கெடு நீட்டிக்கப்பட்டிருந்தது.
இதன்பின்னர், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் ஆகியோரின் கோரிக்கையை ஏற்று மருத்துவர்கள் போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெற்றனர்.