தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு உச்சத்தை தொட்டது.
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் செயல்படுத்த வேண்டும் என்ற தமிழக காங்கிரஸ் கமிட்டி வலியுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது-
கொரோனா தொற்று நோயை பொறுத்தவரை, மத்திய - மாநில அரசுகளின் தவறான அணுகுமுறைகளின் காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை ஏப்ரல் 1 ஆம் தேதி தொற்றுநோயாளிகளின் எண்ணிக்கை 234 ஆக இருந்தது. ஆனால், மே 3 ஆம் தேதி 3 ஆயிரமாக உயர்ந்து மே 29 ஆம் தேதி 20 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதற்கு அ.தி.மு.க. ஆட்சியாளர்களின் தவறான கொள்கைகளே காரணமாகும். தொடக்கத்திலிருந்தே பரிசோதனை கருவிகள் வாங்குவதில் பல்வேறு குளறுபடிகள், தப்லிக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்றவர்களை கண்டறிந்து சோதனை செய்வதில் தாமதம் மற்றும் கோயம்பேடு மொத்த காய்கறி வியாபார சந்தையில் ஆயிரக்கணக்கான பொதுமக்களை அனுமதித்ததில் சென்னை மாநகராட்சி செய்த இமாலய தவறு போன்ற காரணங்களால் சென்னை மாநகரம் கொரோனாவின் கோரப் பிடியில் சிக்கி தவித்து வருகிறது.
கொரோனா வைரஸ் பாதிப்பினால் வியாழக்கிழமை 15 பேர், வெள்ளிக்கிழமை 22 பேர் பலியாகியிருக்கிறார்கள் என்ற செய்தி கடும் அதிர்ச்சியைத் தருகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சென்னையில் 60-க்கும் மேற்பட்டவர்கள் பலியானது மக்களிடையே அச்சமும், பீதியும் ஏற்பட்டுள்ளது. கடந்த வியாழக்கிழமை வரை தமிழகத்தில் நிகழ்ந்த 50 சதவிகித இறப்புகள், தொற்று ஏற்பட்டு 48 மணி நேரத்துக்குள் நிகழ்ந்துள்ளதாக சுகாதாரத்துறை இயக்குனரக தரவுகள் தெரிவிக்கின்றன. இதுவரை தினசரி நிகழ்ந்த இறப்புகளில் இதுவே அதிகபட்சமாகும். தமிழகத்தில் கொரோனாவினால் இதுவரை 145 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் ஒருவர் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட ஒரு மணி நேரத்தில் உயிரிழந்துள்ளார். 4 பேர் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டு 24 மணி நேரத்தில் இறந்துள்ளனர். இத்தகைய இறப்புகளால் சுகாதாரத்துறையே அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறது.
கொரோனாவினால் தேசிய அளவில் 3 சதவிகித இறப்பு நிகழும் நிலையில், தமிழகத்தில் இறப்பு விகிதம் 0.7 சதவிகிதம் இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அடிக்கடி பத்திரிகையாளர் சந்திப்பில் கூறி மகிழ்ச்சி அடைவது மிகுந்த வேதனையை தருகிறது. ஆனால்;, மேலும் பலர் இறக்க வாய்ப்பு இருப்பதாகவும், இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால், இதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சர் கவலைப்படுவதாக தெரியவில்லை. மாறாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று கூறி வருவது மிகுந்த வியப்பை தருகிறது. தமிழகத்தில் இறப்பு விகிதம் குறைவாக இருந்தாலும், வரும் ஜுன் மாத இறுதியில் சென்னையில் மட்டும் கொரோனா தொற்று 2 லட்சத்தை தாண்டும் என்றும், 1,400 பேர் உயிரிழக்கக் கூடும் என்றும் தொற்று நோயியல் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதுகுறித்து ஆய்வு செய்து தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட சுகாதாரத்துறை தயாராக இல்லை.
விரைவான பரிசோதனைகள், விரைந்து நோயை கண்டறிதல் மூலமே இறப்புகளை தடுத்து நிறுத்த முடியும். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சில மணி நேரங்களில் நடுத்தர வயதினர் உட்பட ஏராளமானோர் இறக்கிறார்கள். நோயை கண்டறிவதில் ஏற்படும் தாமதமே இந்த இறப்புகளுக்கு காரணம்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 24 மணி நேரத்தில் இறக்கிறார்கள் என்றால், கொரோனா பரிசோதனை முடிவுகள் மருத்துவர்கள் கைக்கு வரும் முன்பே நோயாளிகள் இறந்து போகிற அவலநிலை இன்றைக்கு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து எவரும் கவலைப்படாமல் இருக்க முடியாது. இத்தகைய பரிதாப நிலைக்கு தமிழக அரசே பொறுப்பாகும்.
பொதுவாக, கொரோனா இறப்புகள் குறைவாக கணக்கிடப்படுவதாகவே தெரிகிறது. இறப்பு எண்ணிக்கையில், பெரிதும் பாதிக்கப்படக் கூடிய முதியவர்களின் எண்ணிக்கை மிக குறைவாக இருப்பது இத்தகைய சந்தேகத்தை உறுதிபடுத்துகிறது. அநேகமாக அவர்களது நோயை கண்டறிய தவறிவிட்டதாகவே தோன்றுகிறது. போதுமான பரிசோதனைகள் செய்யாத நிலையில், பல கொரோனா நோய் இறப்புகள் மாரடைப்பு என பதிவு செய்யப்படுவதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த நிமிடம் வரை, வைரஸின் தன்மை குறித்து மாநில அரசு அறியவில்லை. கொரோனா வைரஸால் உண்மையிலேயே எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும் நமக்கு தெரியாது. பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரையும் நாம் பரிசோதிக்கவில்லை. இதனால் உண்மையான இறப்புகளை அறிய நமக்கு வாய்ப்பில்லை என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள். ஆனால், மே 29 ஆம் தேதி வரை தமிழகத்தில் பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 34 ஆயிரத்து 625. இதன்படி 10 லட்சம் பேருக்கு, 5841 பேருக்கு தான் சோதனை செய்கிற வசதி தமிழக அரசிடம் இருக்கிறது. இதனால், தமிழகத்தில் எத்தனை பேரை கொரோனா பாதித்திருக்கிறது என்பதை அறியாமல் அந்த நோயை ஒழிக்க முடியாது. இதை மூடி மறைப்பதற்காகத் தான் பொது ஊரடங்கை 66 நாட்கள் கழித்தும் மேலும் நீட்டிப்பதற்கான முயற்சிகளில் தமிழக அரசு ஈடுபட்டிருக்கிறது. பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகமானால், அதற்குரிய கட்டமைப்பு மருத்துவ வசதிகள் தமிழக அரசிடம் இல்லை.
இந்தியாவிலேயே தொற்று நோயால் பாதிக்கப்பட்ட முதன்மை மாநிலமாக இருக்கிற மகாராஷ்டிராவிற்கு அடுத்தபடியாக தமிழகம் இருந்து வருகிறது. எண்ணிக்கை கூடுவதைப் பற்றி கவலைப்படாத சுகாதாரத்துறை அமைச்சர், இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் இறப்பு விகிதம் குறைந்திருக்கிறது என அடிக்கடி கூறி முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயற்சிப்பது மிகுந்த கண்டனத்திற்குரியது. இத்தகைய செயல்களின் மூலமாக வேகமாக பரவி வரும் கொரோனாவை தமிழக அரசால் எதிர்கொள்ள முடியுமா என்கிற மிகப்பெரிய கேள்விக்குறி எழுந்துள்ளது. இதனால் மக்கள் மிகுந்த அச்சம், பதற்றத்துடன் வாழ்ந்து வருகின்றனர். இத்தகைய அவலநிலையில் இருப்பதை உணர்ந்து போர்க்கால அடிப்படையில் தமிழக அரசு செயல்பட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.