உயர் நீதிமன்ற தீர்ப்பை பல்வேறு அரசியல் கட்சியினர் வரவேற்றுள்ளனர்.
ஹைலைட்ஸ்
- தமிழக அரசு மேல்முறையீடு செய்யப்போவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன
- அரசு மேல் முறையீடு செய்யக்கூடாது என்று விஜயகாந்த் வலியுறுத்தல்
- பல்வேறு அரசியல் தலைவர்கள் உயர் நீதிமன்ற தீர்ப்பை வரவேற்றுள்ளனர்
தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகளை மூடுவதற்கு சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. இதனை எதிர்த்து தமிழக அரசு சார்பில் மேல் முறையீடு செய்யப்படும் என தகவல்கள் வெளியான நிலையில், அரசு மேல்முறையீடு செய்யக்கூடாது என்று தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக விஜயகாந்த் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது-
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை உடனடியாக மூட சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளதை தேமுதிக வரவேற்கிறது. மதுக்கடைகள் திறக்கக்கூடாது என்று போராடிய தமிழக பெண்களுக்கும்,மக்களுக்கும் கிடைத்த வெற்றி. தமிழகஅரசு உயர்நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக மேல்முறையீடு செய்யகூடாது.
இவ்வாறு விஜயகாந்த் கூறியுள்ளார்.
முன்னதாக தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கு சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவை இன்று பிறப்பித்துள்ளது. இது மதுப்பிரியர்களுக்கு பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில் பெண்களும், சமூக ஆர்வலர்கள் இந்த உத்தரவை வரவேற்றுள்ளனர்.
ஆன்லைனில் மட்டும் விற்பனை செய்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நடைமுறையில் ஆன்லைன் விற்பனை எந்த அளவுக்கு சாத்தியப்படும் என்று தெரியவில்லை.