This Article is From Apr 16, 2020

அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் 5,000 ரூபாய் வழங்க அனைத்து கட்சிகள் வலியுறுத்தல்

தமிழகத்தில் கொரோனாவால் ஏற்பட்டிருக்கும் பாதிப்பு மற்றும் நிவாரண பணிகள் குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில் மதிமுக, விசிக, கம்யூனிஸ்ட், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். வீடியோ கான்பரன்சிங் முறையில் இந்த கூட்டம் நிறைவேற்றப்பட்டது.

அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் 5,000 ரூபாய் வழங்க அனைத்து கட்சிகள் வலியுறுத்தல்

திமுக தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது.

கொரோனா சிறப்பு நிவாரணமாக அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ. 5 ஆயிரத்தை சிறப்பு நிதியாக வழங்க வேண்டும் என்று திமுக தலைமையில் இன்று நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழகத்தில் கொரோனாவால் ஏற்பட்டிருக்கும் பாதிப்பு மற்றும் நிவாரண பணிகள் குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில் மதிமுக, விசிக, கம்யூனிஸ்ட், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். வீடியோ கான்பரன்சிங் முறையில் இந்த கூட்டம் நிறைவேற்றப்பட்டது. 

இதன் முடிவில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ. 5 ஆயிரத்தை கொரோனா சிறப்பு நிவாரண நிதியாக வழங்க வலியுறுத்தப்பட்டது.

இதுதொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளதாவது-

கொரோனா நோய்த் தொற்று அண்டை மாநிலமான கேரளாவில் முதலில் ஜனவரி 30-ஆம் தேதியும் - தமிழ்நாட்டில் முதல் கொரோனா நோய்த் தொற்று 07.03.2020 அன்றும் கண்டுபிடிக்கப்பட்டும், அ.தி.மு.க அரசு இந்த நோய்த் தொற்றின் கடுமை குறித்து எவ்வித கவலையும் கொள்ளாமல் - மார்ச் மாதம் முதல் மாவட்டந்தோறும் கூட்டத்தைக் கூட்டி அரசு விழாக்களை நடத்துவதில் ஆர்வம் காட்டி வந்தது. பிரதான எதிர்க்கட்சி கோரிக்கை விடுத்தும், “சுய ஊரடங்கு” கடைப்பிடிக்கப்பட்ட பிறகும்கூட - அரசு, பல லட்சம் மாணவர்களை “பிளஸ் டூ” தேர்வு எழுத வைத்தது. 

நோய்த் தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பதற்கு ஜனவரி மாதத்திலிருந்து அரசுக்குப் போதிய கால அவகாசம் இருந்தும் அலட்சியப் போக்குடன் செயல்பட்டு வந்தது வேதனைக்குரியது. பின்னர், மார்ச் 22-ஆம் தேதியன்று கடைப்பிடிக்கப்பட்ட “சுய ஊரடங்கு”, மார்ச் 25-ஆம் தேதி முதல் “21 நாட்கள் ஊரடங்காக”த் தொடரப்பட்டது.

ஊரடங்கு காலத்தில் முதலமைச்சரின் கணக்குப்படி 35.89 லட்சம் அமைப்புசாரா தொழிலாளர்கள் மற்றும் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மற்ற வெளி மாநிலத் தொழிலாளர்கள் ஆகியோருக்கு ஏற்பட்ட வருமான, வாழ்வாதார இழப்பு, ஏழை - எளிய - நடுத்தர மக்கள் படும் இன்னல்கள், சிறு குறு தொழில்கள் உள்ளிட்ட அனைத்து வகை தொழில்களுக்கும் ஏற்பட்டுள்ள பொருளாதார இழப்பு - இவற்றால் தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த முன்னேற்றத்திற்கும் ஏற்பட்டுள்ள பேராபத்து - பெரும் பின்னடைவு ஆகியவற்றை இந்த அரசு உரிய அளவு புரிந்து கொள்ளவில்லை என்பதை அனைத்துக் கட்சிகளின் இந்தக் கூட்டம் மிகுந்த வேதனையுடன் பதிவு செய்கிறது.

கடந்த காலப் பேரிடர்களில் நிதி கேட்டு மத்திய அரசுக்குக் கடிதம் எழுதி விட்டு, எப்படி அ.தி.மு.க அரசு “வரும்போது வரட்டும்” என்று அமைதி காத்ததோ அதைப்போலவே, கொரோனா நோய்த் தொற்று விஷயத்திலும், பாய்ந்து காரியம் ஆற்றுவதை விடுத்து, மத்திய பா.ஜ.க அரசிடம் பயந்து பதுங்கி ஒடுங்கியிருப்பது மிகுந்த கவலையளிக்கிறது. 

மத்திய அரசிடம் கொரோனா நோய்த் தடுப்புப் பணிகளுக்காக 15 ஆயிரம் கோடி ரூபாய் “சிறப்பு மானியமாக”க் கோரி விட்டு, வெறும் 870 கோடியே 88 லட்சம் ரூபாய் மட்டும் அளித்துள்ள மத்திய அரசிடம் “கோரிய நிதியைப் பெற முடியாமலும்” - நியாயத்தைத் தட்டிக் கேட்க முடியாமலும் தவிப்பதற்கு இந்தக் கூட்டம் வருத்தம் தெரிவிப்பதுடன்; தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கட்சிகளையும் ஒருங்கிணைத்து - கலந்தாலோசனைக் கூட்டத்தை நடத்தி - மத்திய அரசிடமிருந்து போதிய நிதியைப் பெறுவதற்கும் - நோய்த் தடுப்புப் பணிகளில் அனைவரையும் அரவணைத்து ஒற்றுமையுடனும் முனைப்புடனும் செயல்படுவதற்கும் கூடத் தாமதித்துத் தயங்கி நிற்கும் அ.தி.மு.க அரசின் செயலுக்கு இந்தக் கூட்டம் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

முதல் ஊரடங்கினால் பாதிக்கப்பட்டவர்களுக்கே முழு நிவாரணமும் போய்ச் சேராத சூழலில், தற்போது 03.05.2020 வரை நீட்டிக்கப்பட்டுள்ள இந்த ஊரடங்கினால் விவசாயிகள், மீனவர்கள், நெசவாளர்கள், அமைப்புசாரா தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் மேலும் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள். 

ஆகவே அவர்களின் குறைந்தபட்ச வாழ்க்கைத் தேவையை ஈடுகட்ட அனைத்து ரேசன் கார்டுதாரர்களுக்கும் தலா 5,000 ரூபாய் சிறப்பு நிவாரண உதவியாக வழங்கிட வேண்டுமென்றும், ஊரடங்கினைச் சரியாக நடைமுறைப்படுத்திடும் வகையில் அனைவருக்கும் அத்தியாவசியப் பொருட்களை வீட்டிற்கே கொண்டு சென்று வழங்கிட வேண்டும் என்றும் இந்த கூட்டம் தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறது.

மாநில அரசு கோரியுள்ள 15 ஆயிரம் கோடி ரூபாய் நிதியை உடனடியாக மத்திய அரசு வழங்கிட வேண்டும் என்றும்; அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் தலா 5 ஆயிரம் ரூபாய் சிறப்பு நிவாரண உதவி வழங்குவதற்கு ஏற்ற நிதி உதவியை மத்திய அரசு வழங்கிட முன்வர வேண்டுமென்றும்; அனைத்துக் கட்சிகளின் இந்தக் கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

இவ்வாறு அந்த தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.

.