தமிழக அரசு நியமித்த மருத்துவர்கள் குழுவும், கபசுர குடிநீரை அருந்த பரிந்துரைத்துள்ளது.
தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் கணிசமாக அதிகரித்து வரும் நிலையில், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கபசுர குடிநீரை அருந்துமாறு மக்களை தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக 'ஆரோக்கியம்' என்ற சிறப்புத் திட்டத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்துள்ளார்.
கொரோனா நோய் ஒருவருக்கு பாதிக்கப்பட்டபோதிலும், அவரது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை பொருத்துதான் பாதிப்பின் அளவும் இருக்கும். அதாவது, நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் கொண்டவர்கள், கொரோனாவால் பாதிக்கப்பட்டாலும் அவர்கள் விரைவில் குணம் அடைய அதிக வாய்ப்புகள் உள்ளது.
கொரோனா பாதிப்புக்கு மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக் கொள்வதுதான் கொரோனாவிலிருந்து தப்பிக்கும் வழிகளில் ஒன்றாக உள்ளது.
இந்த நிலையில், மக்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் வகையில் தமிழக அரசு ஆரோக்கியம் என்ற சிறப்பு திட்டத்தை இன்று தொடங்கியுள்ளது. இதனை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமை செயலகத்தில் பணியாற்றும் காவலர்களுக்கு கபசுர குடிநீர் வழங்கி தொடங்கி வைத்தார்.
முன்னதாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கபசுர குடிநீரை மக்களுக்கு வழங்கலாம் என மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகமும், தமிழக அரசு நியமித்த மருத்துவர்கள் குழுவும் பரிந்துரைத்தன. இதேபோன்று நிலவேம்பு குடிநீரும் மக்களுக்கு வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னையில் கொரோனா பரவல் அதிகம் உள்ள இடங்களில் கபசுர குடிநீர், நிலவேம்பு சூரண பொட்டலங்கள் வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
கடந்த 2012-ல் டெங்கு காய்ச்சல் பரவியபோது, சித்த மருத்துவர்கள் நில வேம்பு குடிநீரை வழங்க பரிந்துரைத்தனர். இந்த நிலவேம்பு குடிநீர் நல்ல பலனை அளித்தது குறிப்பிடத்தக்கது.
கபசுர குடிநீர், நிலவேம்பு கசாயம் ஆகியவை மக்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பொருட்கள்தான் என்றும், கொரோனா பாதிப்புக்கான மருந்து இவை அல்ல என்றும் அரசு விளக்கம் அளித்துள்ளது.