ஹைலைட்ஸ்
- தமிழக அரசு ஊரடங்கு கட்டுப்பாடுகளை ஏப்ரல் 30 வரை நீட்டித்துள்ளது
- ரேஷன் கார்டுதாரர்களுக்கு ரூ. 1000 தமிழக அரசால் வழங்கப்பட்டுள்ளது
- குடும்பத்துக்கு தலா ரூ. 5 ஆயிரம் வழங்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கோரிக்கை
தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 30-ம்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் குறைந்தபட்சம் 5000 ரூபாயாவது அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது-
“கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கு காலத்தை ஏப் 30 வரை நீடித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். ஊரடங்கு உத்தரவை மேலும் நீட்டிக்க தமிழக அமைச்சரவை ஒப்புதல் வழங்கியிருப்பதாக தலைமைச் செயலாளர் செய்தியாளர்களிடம் கூறினார்.
சனிக்கிழமை மாலை பேட்டியளித்த தமிழக அரசின் தலைமைச் செயலாளர், ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பான அறிவிப்பை பிரதமர் முடிவெடுத்து வெளியிடுவார் என்று தெரிவித்திருந்தார். ஆனால் தற்போது முதல்வரே மேலும் 16 நாட்கள் ஊரடங்கை நீட்டித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார். முதலில் ஏன் பிரதமர் அறிவிப்பார் என்று கூறினார்கள் என தெரியவில்லை.
ஏற்கெனவே, மூன்று வார காலம் ஊரடங்கு அமலில் இருந்த நிலையில் கூடுதலாக இரண்டு வார காலத்திற்கு மேல் ஊரடங்கு நீட்டிக்கப்படும்போது, முன்பு அளித்த நிவாரணத்தை விட இன்னும் கூடுதலாக அளிப்பதுதான் நியாயமானது. ஆனால், முதல்வரின் அறிவிப்பில், அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு மே மாதத்திற்கான அத்தியாவசிய பொருட்கள் இலவசமாக வழங்கப்படும்; கட்டிடத் தொழிலாளர் உள்ளிட்ட அமைப்புசாராத் தொழிலாளர்களுக்கு இரண்டாவது முறையாக ரூ.1000 வழங்கப்படும். பிற மாநில தொழிலாளர்களுக்கு மே மாதத்திற்கான அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் வழங்கப்படும் என்ற அறிவிப்பை தவிர, வேறு எந்த நிவாரண உதவியும் அறிவிக்கப்படாதது அதிர்ச்சி அளிக்கிறது.
ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்ட ஊரடங்கால் அனைத்துப் பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை மட்டுமல்ல, வாழ்வாதாரமும் முற்றாக முடங்கியுள்ளது. லட்சக்கணக்கான குடும்பங்கள் பட்டினி கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் நிவாரண உதவிகள் எதுவும் வழங்காமல் ஊரடங்கு நீட்டிக்கப்படுவது நிலைமையை இன்னும் மோசமாக்கும். மேலும், பட்டினிச் சாவுகள் ஏற்படும் ஆபத்தும் உள்ளது.
ஊரடங்கிற்கான நியாயத்தை மக்கள் உணர்ந்துள்ளனர். அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பை வழங்கி வருகின்றனர். ஆனால் அதேநேரத்தில், மக்களின் பிரச்சனைகளை அரசு முழுமையாக புரிந்து கொண்டுள்ளதாகத் தெரியவில்லை.
ஒவ்வொரு குடும்பத்திற்கும் குறைந்தபட்சம் 5000 ரூபாயாவது அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஏற்கெனவே வலியுறுத்தியுள்ளது. தற்போது ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையிலாவது, உடனடியாக அனைத்து குடும்பங்களுக்கும் ரூ.5000 வழங்க வேண்டும்.
அதேபோன்று விவசாய தொழிலாளர்கள் வேலையிழந்து கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். அவர்களுக்கும் உரிய நிவாரணம் வழங்கப்பட வேண்டும், இந்த ஊரடங்கினால் கடும் பாதிப்புக்கு ஆளாகியுள்ள விவசாயிகள், சிறு, குறு தொழில் முனைவோர் மற்றும் அனைத்துப் பகுதி தொழிலாளர்களை பாதுகாப்பதற்கான நிவாரண உதவிகள் கூடுதலாக வழங்கப்பட வேண்டும்.”
இவ்வாறு பாலகிருஷ்ணன் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.