This Article is From Jul 01, 2019

7 பேர் விடுதலை குறித்து ஆளுநருக்கு நினைவூட்டல் கடிதம்: தமிழக அரசு

7 பேர் விடுதலை குறித்து ஆளுநருக்கு நினைவூட்டல் கடிதம் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

7 பேர் விடுதலை குறித்து ஆளுநருக்கு நினைவூட்டல் கடிதம்: தமிழக அரசு

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 27 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ள பேரறிவாளன், முருகன், நளினி, ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன் உள்பட 7 பேரை விடுதலை செய்ய தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது என்றும் அதனை பயன்படுத்தி அவர்களை விடுவிக்கலாம் என்று அண்மையில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனையடுத்து, பேரறிவாளன் உள்ளிட்டவர்களின் விடுதலை குறித்து தமிழக அரசு அமைச்சரவையை கூட்டி தீர்மானம் நிறைவேற்றி அதனை ஆளுநருக்கும் அனுப்பி வைத்தது. அந்தப் பரிந்துரை தொடர்பாக ஆளுநர் இதுவரை எவ்வித முடிவையும் எடுக்கவில்லை.

இந்நிலையில் தங்களை முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரி ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோர் 2012ல் தொடர்ந்த வழக்கு இன்று நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எம்.நிர்மல்குமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, ராஜிவ்காந்தி படுகொலை தவிர பிற வழக்குகளில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் பலர் தங்களை விடுவிக்க கோரிய வழக்குகள் ஜூலை 30ல் விசாரணைக்கு வரவுள்ளதால், அவற்றுடன் ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோரின் முன் விடுதலை கோரும் வழக்கையும் இணைத்து விசாரிக்க வேண்டுமென அரசு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

அப்போது நீதிபதிகள் ஆளுநர் மாளிகையில் விளக்கம் பெற்று தெரிவிக்க ஏற்கனவே அவகாசம் கோரினீர்கள், இன்னும் ஏன் தாமதம் என கேள்வி எழுப்பினர்.

அதற்கு அரசு தரப்பில் ஆளுநருக்கு இதுகுறித்து நினைவூட்டல் கடிதம் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கு விசாரணை ஜூலை 30ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டது.

.