This Article is From Sep 08, 2018

12 துறைகளில் முதலீடுகளை ஈர்க்க தமிழக அரசு மும்முரம்

ரூ. 18 லட்சம் கோடி முதலீட்டை ஈர்க்க 200 திட்டங்களை தமிழக அரசு அடையாளம் கண்டுள்ளது

12 துறைகளில் முதலீடுகளை ஈர்க்க தமிழக அரசு மும்முரம்

சென்னை: ஜவுளி, புதுப்பிக்கத்தக்க ஆற்றல், பெட்ரோ கெமிக்கல் உள்ளிட்ட 12 துறைகளில் முதலீடுகளை ஈர்க்க தமிழக அரசு தயாராகி வருவதாக மாநில தொழில்துறை அமைச்சர் எம்.சி. சம்பத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, அடுத்த ஆண்டு ஜனவரி 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் 2-வது முறையாக சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டை தமிழக அரசு சென்னையில் நடத்தவுள்ளது. முதலீட்டாளர்களை கவரும் வகையில் நிலம் ஒதுக்கீடு, சிறந்த அடிப்படை கட்டமைப்பு போன்றவை தமிழகத்தில் உள்ளன. முதலீடு செய்வதற்கான சிறந்த அம்சங்களை தமிழகம் கொண்டுள்ளது. தென் மாவட்டங்களில் அதிக முதலீட்டை பெற கவனம் செலுத்துகிறோம் என்றார்.

2015-ல் முதன் முறையாக முதலீட்டாளர்கள் மாநாட்டை தமிழக அரசு நடத்தி 2.42 லட்சம் கோடி ரூபாயை முதலீடாகப் பெற்றது. இவற்றில் 63 திட்டங்களின் மூலமாக 73 ஆயிரம் கோடி ரூபாய் பெறப்பட்டது.

தற்போது நடத்தப்படவுள்ள 2-வது மாநாட்டின்போது, முதல் மாநாட்டில் பெறப்பட்ட முதலீட்டை விடவும் அதிக முதலீட்டை ஈர்க்க தமிழக அரசு மும்முரம் காட்டி வருகிறது.

நாட்டில் மொத்த ஆட்டோ மொபைல் உற்பத்தியில் தமிழகத்தின் பங்கு 27.45 சதவீதமாக உள்ளது. சுமார் 18 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான முதலீட்டை ஈர்க்கும் வகையில் 200 அடிப்படை கட்டமைப்பு திட்டங்களை தமிழக அரசு அடையாளம் கண்டுள்ளது. தமிழகதில் 38 சிறப்பு பொருளாதார மண்டலங்களும், 22 தொழில் பூங்காக்களும் உள்ளன.

.