ஜனவரி 6-ம்தேதி திங்களன்று பள்ளிகள் திறக்கப்படுகின்றன.
தமிழகத்தில் அரையாண்டு தேர்வு முடிந்து பள்ளிகள் மீண்டும் ஜனவரி 6-ம்தேதி திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வி இயக்குனர் தெரிவித்துள்ளார். அரையாண்டு தேர்வு முடிந்து ஜனவரி 4-ம்தேதி பள்ளிகள் திறக்கும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மேலும் 2 நாட்கள் விடுமுறை நீட்டிக்கப்பட்டிருக்கிறது.
தமிழகத்தில் 10,11,12 உள்ளிட்ட வகுப்புகளுக்கு அரையாண்டு தேர்வுகள் கடந்த 11-ம்தேதி தொடங்கி 23-ம்தேதி வரையில் நடைபெற்றன. இதையடுத்து, அரையாண்டு தேர்வு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.
அரையாண்டு விடுமுறைக்கு பின்னர் தமிழகத்தில் ஜனவரி 2-ம்தேதி பள்ளிகள் திறக்க திட்டமிடப்பட்டிருந்தது.
இதற்கிடையே தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு முடிவுகள் ஜனவரி 2-ம்தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, 3-ம்தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்தது.
3-ஆம் தேதியும் வாக்கு எண்ணிக்கை தொடரலாம் என தேர்தல் அதிகாரிகள் வட்டாரத்தில் ஆலோசிக்கப்பட்டது. இதனால் பள்ளிகள் திறப்பை 4-ஆம் தேதிக்கு பள்ளிக் கல்வித்துறை மாற்றியது.
எதிர்பார்த்தபடியே, வாக்கு எண்ணிக்கை 2-வது நாளாக இன்றும் நடைபெற்று வருகிறது. இதனால் தேர்தல் பணிகள் முழுவதும் நிறைவடையாத நிலையில், விடுமுறையை மேலும் 2 நாட்கள் நீட்டித்து பள்ளிக் கல்வி இயக்குநரகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறம் பள்ளிகள் ஜனவரி 6-ம்தேதி திங்களன்று திறக்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.