This Article is From Feb 06, 2020

நடிகர் விஜய் வீட்டில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனை நிறைவு!!

நடிகர் விஜயின் சாலிகிராமம் மற்றும் பனையூரில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று முதற்கொண்டு விசாணை நடத்தி வந்தனர். சுமார் 23 மணி நேரமாக நடைபெற்ற விசாரணை தற்போது நிறைவு பெற்றுள்ளது.

நடிகர் விஜய் வீட்டில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனை நிறைவு!!

தமிழகத்தில் நடத்தப்பட்ட சோதனை தொடர்பாக வருமான வரித்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

நடிகர் விஜயின் பனையூர் வீட்டில் கடந்த 23 மணிநேரமாக நடைபெற்று வந்த சோதனை நிறைவுபெற்றுள்ளது. இந்த சோதனையின்போது விஜயின் மனைவி சங்கீதாவிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் வாக்கு மூலம் பெற்றுக் கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

கடந்த தீபாவளியன்று வெளியான விஜய் நடித்த பிகில் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வசூலைக் குவித்தது. இதில் தயாரிப்பாளர் தரப்பான ஏ.ஜி.எஸ். நிறுவனத்திற்கு கிடைத்த வருமானம், நடிகர் விஜய்க்கு அளிக்கப்பட்ட ஊதியம் உள்ளிட்டவை தொடர்பாக வருமான வரித்துறையினர் நேற்று மாலை முதற்கொண்டு விசாரணை நடத்தி வந்தனர்.

முதலில் நேற்று நெய்வேலியில் நடைபெற்ற மாஸ்டர் படப்பிடிப்பு தளத்திற்கு சென்ற அதிகாரிகள் அங்கு விஜய்க்கு சம்மன் அளித்தனர்.

இதையடுத்து விஜய் சென்னைக்கு வந்ததுடன் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுத்தார். இதேபோன்று ஏ.ஜி.எஸ். நிறுவனம் மற்றும் பைனான்சியர் அன்புச் செழியனுக்கு சொந்தமான இடங்கள் உள்ளிட்டவைகளில் சோதனை நடத்தப்பட்டது. 

மொத்தம் 38 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ. 77 கோடி கைப்பற்றப்பட்டது. சோதனை தொடர்பாக வருமான வரித்துறையினர் அறிக்கை வெளியிட்டிருந்தனர். அந்த அறிக்கையில் ரூ. 300 கோடி வரையில் வருமானம் மறைக்கப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இதேபோன்று முக்கிய ஆவணங்கள், பத்திரங்கள் உள்ளிட்டவை சோதனையின்போது அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டிருந்தன. 

விஜயின் சாலி கிராமம் மற்றும் பனையூர் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. இந்த நிலையில் தற்போது பனையூர் விஜய் வீட்டில் நடத்தப்பட்ட சோதனை நிறைவு பெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

ஒட்டுமொத்தமாக நடத்தப்பட்ட சோதனை குறித்த விவரங்களை, வருமான வரித்துறை அறிக்கையாக வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

.