This Article is From Apr 09, 2020

இஸ்லாமியர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ஜமாத்துல் உலமா சபை!!

கொரோனா தொற்று நோய் பரவலை தடுப்பதற்காக பள்ளிவாசல்களில் கூட்டு தொழுகைகள் ரத்து செய்யப்பட்டு முஸ்லிம்கள் அனைவரும் வீடுகளிலேயே தொழுகை நடத்தும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இது ஊரடங்கு உத்தரவு திரும்பப் பெறும் வரை நீடிக்கும் என தமிழ்நாடு அனைத்து இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இஸ்லாமியர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ஜமாத்துல் உலமா சபை!!

ஹைலைட்ஸ்

  • கொரோனா தொற்று பரவி வருவதால் சமூக விலகுதலை மக்கள் கடைபிடிக்கின்றனர்
  • மசூதிகளில் கூட்டு பிரார்த்தனைகள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன
  • புனித இரவான இன்று சிறப்பு பிரார்த்தனைகளை வீட்டில் மேற்கொள்ள அறிவுறுத்தல்

பரா அத் இரவான இன்று, இஸ்லாமியர்கள் அனைவரும் வீட்டிலேயே சிறப்பு பிரார்த்தனைகளை மேற்கொள்ளுமாறு தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை கேட்டுக் கொண்டுள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது-

''இன்று இரவு புனித பரா- அத் இரவாகும். தற்போது நாடு முழுவதும் முடக்கப்பட்டுள்ள சூழலில் முஸ்லிம் பெருமக்கள் பரா- அத் இரவுக்கான அனைத்து அமல்களையும் தங்கள் வீடுகளிலேயே அமைத்துக் கொள்ளுமாறும், மறுநாள் வெள்ளிக்கிழமை நோன்பில் ஈடுபடுமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

பரா-அத் இரவில் சூரா யாசீன் ஓதிய பின்பும், மறுநாள் நோன்பு திறக்கும் நேரத்திலும் தாங்கள் செய்யும் துவாவில் உலக மக்கள் அனைவருக்கும் கொரோனா நோய்த் தொற்றிலிருந்து முழுமையாகவும் விரைவாகவும் பாதுகாப்பு பெற அல்லாஹ்விடம் அழுது பிரார்த்திக்கவும்.

நாடு முழுவதும் முடக்கப்பட்டிருப்பதால் ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்யும் பணியில் ஈடுபட்டிருப்போர் ஜகாத் பணத்தை (ஏழைகளுக்கு இஸ்லாமியர்கள் ஆண்டுதோறும் வழங்கும் உதவி) ஏழை எளிய மக்களுக்கு பயன்படுத்துமாறும், ஜகாத் தவிர இதர பணம், மற்றும் பொருட்களிலிருந்து சகோதர சமய மக்களுக்கு உதவுமாறும் கேட்டுக்கொள்கிறோம்''.

இவ்வாறு தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

.