காரில் வந்த 5 பேரில் 4 பேரிடம் கைத்துப்பாக்கி இருந்ததாக கூறப்படுகிறது.
Chennai: மதுரை டோல் கேட்டில் பணம் கட்ட மறுத்து 5 பேர் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
மதுரை மாவட்டம் கப்பலூர் டோல் கேட்டில்தான் துப்பாக்கிச் சூடு நடந்திருக்கிறது. சென்னை சேர்ந்த 5 பேர் வழக்கு விசாரணைக்காக நெல்லைக்கு வந்துவிட்டு, இன்று மதியம் திரும்பிக் கொண்டிருந்தனர். மதுரை அருகே கப்பலூர் டோல்கேட் வந்தபோது, அங்கு ஊழியர்கள் சுங்க கட்டணம் கேட்டுள்ளனர்.
இதனை அவர்கள் தரமறுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து ஊழியர்களுக்கும் காரில் இருந்த 5 பேருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. ஒரு கட்டத்தில் காருக்குள் இருந்த சசிகுமார் என்பவர், ஆத்திரத்தின் உச்சிக்கே சென்று, வெளியே வந்தார். பின்னர் தான் வைத்திருந்த கைத்துப்பாக்கியால் ஊழியர்களை நோக்கியும், வானத்தை நோக்கியும் சுடத் தொடங்கினார்.
அதிர்ஷ்டவசமாக இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதனைப் பார்த்த ஊழியர்கள் சசிகுமாரை பிடிக்க வந்தனர். அதற்குள்ளாக காரில் வந்தவர்கள் காரை வேகமாக எடுத்துச் சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டு, வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டது. சசிகுமாரை பிடித்த ஊழியர்கள், அவரை போலீசிடம் ஒப்படைத்தனர்.
காரில் தப்பிச் சென்றவர்கள் தேனிக்கு செல்லவிருந்ததாக தெரிகிறது. வாகன சோதனை காரணமாக, காரில் இருந்த 4 பேரும் அதனை விட்டு இறங்கி ஆட்டோவில் ஏறி தப்ப முயன்றனர். அவர்களை, உசிலம்பட்டியை அடுத்துள்ள வாலாந்தூர் சோதனை சாவடியில் போலீசார் மடக்கிப்பிடித்தனர்.
கைதான 4 பேரிடம் இருந்து 3 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன. மொத்தம் இந்த விவகாரத்தில் 4 துப்பாக்கிகள் பறிமுதல் ஆகியுள்ளது. அவர்கள் யார், பின்னணி என்ன என்பது குறித்து மாவட்ட எஸ்.பி. மயில் வாகனன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.