This Article is From Jun 28, 2019

மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்து சட்டப்பேரவை ஒத்திவைப்பு!

தமிழகத்தில் மக்களவை தேர்தலுடன் காலியாக இருந்த 22 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் திமுக 13 தொகுதிகளிலும், அதிமுக 9 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது.

மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்து சட்டப்பேரவை ஒத்திவைப்பு!


பரபரப்பான அரசியல் சூழ்நிலையல், தமிழக சட்டப் பேரவை கூட்டத் தொடர் இன்று காலை தொடங்கியதும், மறைந்த சட்டமன்ற உறுப்பினர்கள் சூலூர் கனகராஜ், விக்கிரவாண்டி ராதாமணி ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அவை ஒத்திவைக்கப்பட்டது. 

முன்னதாக, தமிழக சட்டப்பேரவையில் நடப்பு ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்டது. பின் பட்ஜெட் மீதான விவாதம் நடத்தப்பட்டு, தேதி குறிப்பிடப்படாமல் சட்டப்பேரவை ஒத்திவைக்கப்பட்டது. 

தொடர்ந்து, மக்களவை தேர்தல் காரணமாக, ஒரு மாதம் வரை நடைபெறும் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெறாமல் தமிழக சட்டப்பேரவை ஒத்தி வைக்கப்பட்டது. தொடர்ந்து, தமிழகத்தில் மக்களவை தேர்தலுடன் காலியாக இருந்த 22 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் திமுக 13 தொகுதிகளிலும், அதிமுக 9 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. 

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெறுவதற்காக தமிழக சட்டப்பேரவை கூட்டம் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. கூட்டம் தொடங்கியதும், மறைந்த சட்டமன்ற உறுப்பினர்கள் சூலூர் கனகராஜ், விக்கிரவாண்டி ராதாமணி ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

மேலும் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சுந்தரதாஸ், பஞ்சவர்ணம், சுப்பிரமணியம், உள்ளிட்ட 8 பேருக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து வரும் திங்கட்கிழமைக்கு சபாநாயகர் ஒத்திவைத்து உத்தரவிட்டார். இதையடுத்து மீண்டும் ஜூலை 1ம் தேதி தொடங்கி ஜூலை 30ம் தேதி வரை 23 நாட்கள் சட்டப்பேரவை கூட்டம் நடைபெறுகிறது.  

இந்தக் கூட்டத் தொடரில் தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பிரச்சினை, ஸ்டெர்லைட் விவகாரம், ஹைட்ரோகார்பன் திட்டம், மேகதாது அணை விவகாரம் உள்ளிட்ட பிரச்சினைகளை எழுப்ப தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

இதனிடையே, பேரவைத் தலைவர் தனபால் மீது திமுகவினர் அளித்துள்ள நம்பிக்கையில்லாத் தீர்மானம் மீதான வாக்கெடுப்பு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தை வலியுறுத்தப்போவதில்லை என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மேலும், இது தொடர்பாக சபாநாயகரிடம் கடிதம் கொடுத்துள்ளோம். அன்று இருந்த சூழலில் அப்படி ஒரு நிலை எடுக்கவேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டோம், தற்போது அது தேவையில்லை, என்று கருதி கொடுத்திருக்கிறோம் என்று அவர் தெரிவித்துள்ளார். 
 

.