This Article is From Jan 03, 2020

21 வயதில் ஊராட்சி மன்ற தலைவர்!! சுயேச்சையாக போட்டியிட்டு அசத்திய கல்லூரி மாணவி!

தமிழகத்தில் 2 கட்டங்களாக நடத்தப்பட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. விடிய விடிய வாக்கு எண்ணும் பணி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

21 வயதில் ஊராட்சி மன்ற தலைவர்!! சுயேச்சையாக போட்டியிட்டு அசத்திய கல்லூரி மாணவி!

கே.என். தொட்டியின் ஊராட்சி மன்ற தலைவராக தேர்வு செய்யப்பட்டிருக்கும் ஜெய்சந்தியா ராணி

நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில், கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த கல்லூரி மாணவி ஜெய்சந்தியா ராணி கே.என். தொட்டியின் ஊராட்சி மன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சுயேச்சையாக போட்டியிட்ட அவர், தன்னை எதிர்த்து களத்தில் நின்ற வேட்பாளர்களை விட 210 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றிருக்கிறார். 

தமிழகத்தில் கடந்த டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது. இன்று வாக்குகள் எண்ணும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தப் பணி நாளை வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 10 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. மேலும் 23 மாவட்ட கவுன்சிலர்கள், 221 ஒன்றிய கவுன்சிலர்களும் கிருஷ்ணகிரி மாவட்டத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். 

இந்நிலையில் காட்டு நாயக்கன் தொட்டி கிராம ஊராட்சி மன்ற தேர்தலில் 21 வயதாகும் கல்லூரி மாணவி சந்தியா ராணி சுயேச்சையாக நிறுத்தப்பட்டார். இன்று வாக்கு எண்ணிக்கையின்போது சந்தியா 210 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதன் மூலம் மாவட்டத்திலேயே இளம் வயதில் ஊராட்சி மன்ற தலைவர் என்ற பெயரை இவர் பெற்றிருக்கிறார்.  ஜெய்சந்தியா ராணி தனியார் கல்லூரி ஒன்றில் பி.பி.ஏ. இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். 

இதற்கிடையே, திமுகவை உள்ளாட்சி தேர்தலில் தோற்கடிக்க அதிமுக சதி செய்வதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். சேலம் மாவட்டத்தில் வாக்குகள் எண்ணும் பணி முடிந்து விட்டதாக கூறியுள்ள ஸ்டாலின், இங்கு திமுக வேட்பாளர் முன்னிலை பெற்று வந்த நிலையில் வெற்றி பெற்றது யார் என்று அறிவிக்கப்படால் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

வாக்குகளை எண்ணும் பணி சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதனை சமர்ப்பிக்குமாறு தமிழக தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 

.