This Article is From Dec 11, 2019

தமிழக உள்ளாட்சி தேர்தல் : அதிமுக வேட்பாளர் பட்டியல் விரைவில் வெளியீடு - ஜெயக்குமார் தகவல்!!

உச்ச நீதிமன்றம், தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களை தவிர எஞ்சிய மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடத்த அனுமதி வழங்கியது. இதேபோல், உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக ஏற்கனவே வெளியிட்ட அறிவிப்பை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது.

Advertisement
தமிழ்நாடு Written by

தமிழக உள்ளாட்சி தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் சென்னை ராயப்பேட்டையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது-

உச்ச நீதிமன்றத்தை பொருத்தவரை 3 உத்தரவை பிறப்பித்துள்ளது. ஒன்று, 9 மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் தேர்தலை நடத்தலாம். இரண்டாவதாக இந்த 9 மாவட்டங்களில் 3 மாதத்திற்குள் தேர்தலை நடத்த வேண்டும் என்பது இன்னொரு உத்தரவு. 

மூன்றாவது 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தேர்தலை நடத்த வேண்டும் என்பது மற்றொரு உத்தரவு. இதன் அடிப்படையில் தேர்தல் நடைபெறவுள்ளது. அடுத்த கட்ட தேர்தல், அதாவது நகராட்சிக்கோ, மாநகராட்சிக்கோ, பேரூராட்சிக்கோ தேர்தல் நடத்துவது குறித்து தேர்தல் ஆணையம் உரிய நேரத்தில் அறிவிக்கும்.

Advertisement

எங்களது கூட்டணி கட்சிகளுக்குள் எந்தவொரு பிணக்கமும் கிடையாது. எந்தவொரு சுணக்கமும் கிடையாது. சுமுகமாக பேச்சுவார்த்தை நடக்கிறது. எல்லோரும் ஒருமித்த கருத்தோடு, மகிழ்ச்சியோடு ஏற்கும் வகையில்தான் பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருக்கின்றன. 

எல்லாவற்றிலும் நாங்கள் வேகமாக இருக்கிறோம். வேட்பாளர் அறிவிப்பிலும் கூட சூப்பர் ஃபாஸ்டாக எங்களது ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் விரைவில் அறிவிப்பார்கள். 

Advertisement

இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். தமிழகத்தில் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என மாநில தேர்தல் ஆணையம் கடந்த 2ம் தேதி அறிவித்தது. 

இந்நிலையில் வார்டு மறுவரையறை பணிகளை சரியாக முடிக்காததால் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பாணையை ரத்து செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் திமுக தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. 

Advertisement

இந்த வழக்கில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களை தவிர எஞ்சிய மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடத்த அனுமதி வழங்கியது. இதேபோல், உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக ஏற்கனவே வெளியிட்ட அறிவிப்பை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. 

Advertisement