அடுத்த கட்டமாக டிசம்பர் 30-ம் தேதியான திங்களன்று வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
தமிழகத்தில் 27 மாவட்டங்களில் முதல்கட்ட ஊரக உள்ளாட்சிமன்ற தேர்தல் இன்று காலை தொடங்கி மாலை 5 மணியுடன் நிறைவு பெற்றது. அடுத்த கட்டமாக டிசம்பர் 30-ம் தேதியான திங்களன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
தமிழகத்தில் 91 ஆயிரத்து 975 பதவிகளுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. மொத்தம் 2 லட்சத்து 31 ஆயிரத்து 890 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். முதற்கட்டமாக, 156 ஊராட்சி ஒன்றியங்களுக்கு இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்றது.
மக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வமுடன் தங்களது வாக்குகளை செலுத்தினர். மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. அதன்பின்னர் வாக்குப்பதிவு நிறைவு பெற்றதாக தமிழக தேர்தல் ஆணையம் அறிவித்தது.
முன்னதாக வாக்குப்பதிவையொட்டி, 24 ஆயிரத்து 680 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.
இந்த தேர்தலில் 4 பதவியிடங்களுக்கு 4 வகையான வாக்குச் சீட்டுகள் பயன்படுத்தப்பட்டன. கிராம ஊராட்சி வார்டு உறுப்பினரை தேர்வு செய்ய வெள்ளை நிற வாக்குச்சீட்டுகள், கிராம ஊராட்சி தலைவரை தேர்வு செய்ய இளஞ்சிவப்பு நிற வாக்குச்சீட்டுகள், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினரை தேர்வு செய்ய மஞ்சள் நிற வாக்குச்சீட்டுகள், ஒன்றிய கவுன்சிலரை தேர்வு செய்ய பச்சை நிற வாக்குச்சீட்டுகள் பயன்படுத்தப்பட்டன.
வாக்குப்பதிவு நடைபெறும் இடங்களை கண்காணிக்க ஒவ்வொரு மாவட்டத்திற்கும் மேற்பார்வையாளராக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருந்தார்கள். வாக்குச்சாவடிகளில் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு செய்யப்பட்டது.
தேர்தல் பாதுகாப்பு பணியில் காவலர்கள், முன்னாள் ராணுவத்தினர் உள்ளிட்ட 63 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தபட்டிருந்தனர். பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் நிறுத்தப்பட்டனர்.
முதல்கட்டமாக நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் 60 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகள் பதிவாகியிருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக டிசம்பர் 30-ம் தேதியான திங்களன்று வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.