தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடத்தப்பட உள்ளது.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலர்கள் கூடி, மேயரை தேர்ந்தெடுக்க வகை செய்யும் மறைமுக தேர்தலுக்கு தமிழக அரசு அவசர சட்டத்தை பிறப்பித்துள்ளது. இது ஜனநாயக விரோதமானது என்று எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
தமிழகத்தில் உள்ளாட்சி மன்ற தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ளது. இதன் மூலம் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், தலைவர்கள், மேயர் உள்ளிட்ட பதவிகள் நிரப்பப்பட உள்ளன.
உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக தமிழக அமைச்சரவை நேற்று முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டது. அப்போது, மேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் நடத்துவது தொடர்பாக முடிவு எடுக்கப்பட்டது என தகவல்கள் வெளியாகின. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.
மறைமுக தேர்தல் முறையில் நேரடியாக மக்கள் அல்லாமல் அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் மேயர், தலைவர்களை தேர்வு செய்ய வேண்டும். இதில் குதிரை பேரம் ஏற்பட வாய்ப்புள்ளதாக எதிர்க்கட்சிகள் பிரச்னை எழுப்பின.
இந்த சூழலில் மேயர் பதவிக்கு மறைமுக தேர்தலை நடத்த வழி செய்யும் அவசர சட்டத்தை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. இதற்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித்தும் ஒப்புதல் அளித்திருக்கிறார்.
தமிழக அரசின் நடவடிக்கை குறித்து விளக்கம் அளித்துள்ள மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், 'ஜனநாயகத்தில் மறைமுகத் தேர்தலுக்கும் அனுமதி இருக்கிறது. இது சட்டத்திற்கு விரோதமான செயல் அல்ல. திமுக ஆட்சிக் காலத்திலும் மேயர் பதவிக்கு மறைமுகத் தேர்தல் நடத்தப்பட்டிருக்கிறது' என்று கூறியுள்ளார்.