This Article is From Dec 17, 2019

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் நிறைவுபெற்றது!!

நிர்வாக ரீதியில் புதிதாக மாற்றி அமைக்கப்பட்ட 9 மாவட்டங்களை தவிர்த்து மற்ற 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது.

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் நிறைவுபெற்றது!!

இன்று மாலை 5 மணியுடன் வேட்பு மனுத்தாக்கல் நிறைவு பெற்றது.

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்று மாலை 5 மணியுடன் நிறைவுபெற்றது. நிர்வாக ரீதியில் புதிதாக மாற்றி அமைக்கப்பட்ட 9 மாவட்டங்களை தவிர்த்து மற்ற 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. 

ஊரக உள்ளாட்சிகளில் உள்ள ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சி மன்ற தலைவர், ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு மட்டுமே மாநில தேர்தல் ஆணையம் கடந்த 2-ம்தேதி தேர்தல் அறிவிப்பை வெளியிட்டது. 

இதற்கிடையே, திருநெல்வேலி, வேலூர், காஞ்சிபுரம், விழுப்புரம் ஆகிய 5 மாவட்டங்களை நிர்வாக ரீதியில் மொத்தம் 9 மாவட்டங்களாக தமிழக அரசு பிரித்தது.

இந்த நிலையில், இட ஒதுக்கீடு முறையை பின்பற்ற வேண்டும், புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களில் வார்டுகள் வரையறை செய்யப்பட வேண்டும். இதன்பின்னரே உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தி திமுக தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இதனை விசாரித்த நீதிமன்றம் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களை தவிர்தது மற்ற 27 மாவட்டங்களில் தேர்தலை நடத்திக் கொள்ளலாம் என உத்தரவு பிறப்பித்தது. இதன் அடிப்படையில், கடந்த 9-ம்தேதி வேட்பு மனுத்தாக்கல் தொடங்கி விறு விறுப்பாக நடைபெற்று வந்தது.

வேட்பு மனுத்தாக்கலுக்கு இன்றே கடைசி என அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று மாலை 5 மணியுடன் வேட்பு மனுத்தாக்கல் நிறைவு பெற்றுள்ளது. 

நாளை மனுக்கள் பரிசீலனை செய்யப்படுகிறது. 19-ம்தேதி வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம். டிசம்பர் 27 மற்றும் 29 ஆகிய தேதிகளில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டு முடிவுகள் 2020 ஜனவரி 2-ம்தேதி அறிவிக்கப்படுகின்றன.

தேர்தல் நடைபெறவுள்ள 27 மாவட்டங்களில், 76 ஆயிரத்து 746 ஊராட்சி வார்டு உறுப்பினர், 9,624 ஊராட்சி தலைவர்கள், 5,090 ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், 515 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகள் நிரப்பப்படவுள்ளன. 

.