பதற்றம் நிறைந்த 8 ஆயிரம் வாக்குச் சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலின் 2-வது கட்ட வாக்குப்பதிவு 27 மாவட்டங்களில் காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது. வாக்காளர்கள் மிகுந்த ஆர்வத்துடன் வந்து தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். ஒரு சில இடங்களில் தேர்தல் புறக்கணிப்பு சம்பவங்களும் நடந்துள்ளன.
மேலும் 5 மணிக்குள் வாக்குச்சாவடிக்கு வந்தவர்களுக்கு மட்டும் டோக்கன் வழங்கி வாக்களிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது
மதியம் 3 மணி நிலவரப்படி 61.45 சதவீத வாக்குகள் பதிவாகியிருப்பதாக தமிழக தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்திருந்தது.
தமிழகத்தில் நெல்லை, தென்காசி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 9 மாவட்டங்கள் புதிதாக ஏற்படுத்தப்பட்டன.
இவற்றை தவிர்த்து மீதம் உள்ள 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி வேட்புமனுத்தாக்கல் கடந்த 9-ம்தேதி தொடங்கி 16-ம்தேதி வரையில் நடைபெற்றன.
இந்த நிலையில் முதல்கட்டமாக 27-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் 156 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், கிராம ஊராட்சி தலைவர்கள் என மொத்தம் 45 ஆயிரத்து 336- பதவிகளுக்கு வாக்காளர்கள் தங்களது பிரதிநிதிகளை தேர்வு செய்தனர்.
முன்னதாக, வேட்பு மனுத்தாக்கலின்போது, 18 ஆயிரத்து 570 பதவிகள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டன. முதல் கட்ட தேர்தலில் மொத்தம் 76.19 சதவீத வாக்குகள் பதிவானது.
இந்த நிலையில் இன்றைக்கு மொத்தம் 46 ஆயிரத்து 639 பதவிகளுக்கான 2-ம் கட்ட தேர்தல் காலை 7 மணிக்கு தொடங்கி விறு விறுப்புடன் நடைபெற்று வருகிறது.
இந்த தேர்தலில் மொத்தம் 1 கோடியே 28 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றவர்கள் என்று தெரிவிக்கபப்ட்டுள்ளது. ஒரே நேரத்தில் 4 பதவிகளுக்கான நிர்வாகிகள் இந்த தேர்தலில் தேர்வ செய்யப்படுவதால், ஒவ்வொரு வாக்காளர்களும் 4 வாக்குகளை பதிவு செய்ய வேண்டும்.
2-ம் கட்ட வாக்குப்பதிவை பொறுத்தளவில் சுமார் 8 ஆயிரம் வாக்குச் சாவடிகள் பதற்றம் நிறைந்தவை என்று அறியப்பட்டுள்ளன. இங்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சில இடங்களில் தேர்தல் புறக்கணிப்பு சம்பவங்கள் நடந்திருக்கின்றன.
வாக்குப்பதிவை தமிழக தேர்தல் ஆணையர் பழனிசாமி உள்ளிட்ட அதிகாரிகள் கோயம்பேட்டில் உள்ள தமிழக தேர்தல் ஆணைய அலுவலகத்தில் கண்காணித்து வந்தனர். முதல் மற்றும் 2-ம் கட்ட தேர்தலில் பதிவான வாக்குகள் வியாழக்கிழமையான 2-ம்தேதி எண்ணப்பட்டு அன்றைக்கே முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.
தேர்தலையொட்டி மொத்தம் 63 ஆயிரம் போலீசார் பாதுகாப்ப பணியில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே, தஞ்சை, தூத்துக்குடி, புதுக்கோட்டை, பெரம்பலூர், தர்மபுரி, மதுரை, கிருஷ்ணகிரி, நாகை ஆகிய மாவட்டங்களில் ஓட்டுச் சீட்டுகளில் குளறுபடி, ஓட்டுப் பெட்டிகளை கைப்பற்றுதல் போன்ற சம்பவங்கள் நடந்துள்ளன. இங்கு மட்டும் 30 வாக்குச் சாவடிகளில் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இந்த 30 வாக்குச் சாவடிகளில் நாளை காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரையில் வாக்குப்பதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.