அதிமுக தரப்பில் 3 எம்.பி.க்கள் மாநிலங்களவைக்கு செல்ல உள்ளனர்.
மாநிலங்களவை தேர்தலில் மதிமுக வேட்பாளராக அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ முன்னிறுத்தப்பட்டுள்ளார். இதையடுத்து அவர் மாநிலங்களவைக்கு செல்வது உறுதியாகியுள்ளது.
மக்களவை தேர்தலின்போது திமுக கூட்டணியில் மதிமுக இடம்பெற்றது. அக்கட்சிக்கு மக்களவை தொகுதி ஒன்றும், மாநிலங்களவை எம்.பி. பதவியும் வழங்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது.
மக்களவை தேர்தலில் ஈரோடு தொகுதி மதிமுகவுக்கு வழங்கப்பட்ட நிலையில் அக்கட்சியின் சார்பில் போட்டியிட்ட கணேச மூர்த்தி வெற்றி பெற்றார். தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேலூர் மற்றும் தேனி தொகுதிகளை தமிழகத்தில் உள்ள மற்ற 37 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்றது.
தமிழகத்தில் 6 மாநிலங்களவை எம்.பி. பதவி காலியாகியுள்ள நிலையில், 3 உறுப்பினர்களை தேர்வு செய்யும் அளவுக்கு சட்டசபையில் திமுகவுக்கு பலம் உள்ளது. இதன்படி முன்னாள் தமிழக அரசின் கூடுதல் வழக்கறிஞர் பி. வில்சன், தொமுச பொதுச் செயலாளர் சண்முகம் ஆகியோரை திமுக வேட்பாளராக நிறுத்தியது. மற்றொரு எம்.பி. சீட் மதிமுகவுக்கு அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் மதிமுக தரப்பில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டுள்ளார். இதையடுத்து அவர் மாநிலங்களவைக்கு செல்வது உறுதியாகி விட்டது.
எதிர்த்தரப்பில் அதிமுகவுக்கு 3 எம்.பி. சீட்டுகள் உள்ளன. இவற்றில் ஒன்றை பாமகவுக்கு வழங்க வேண்டும் என்பது தேர்தல் கூட்டணி ஒப்பந்தமாகும். மற்ற 2 சீட்டுகள் கே.பி. முனுசாமி, தமிழ் மகன் உசேன் ஆகியோருக்கு வழங்கப்படலாம் என தெரிகிறது.