This Article is From May 15, 2019

“எம்.ஜி.ஆர் ஆட்சியை ஜெ., கலைத்தாரா..?”- தினகரனை சாடும் ஜெயக்குமார்

‘எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்ட ஆட்சியை ஜெயலலிதா கலைத்தார். அதைப் போலத்தான் எடப்பாடியின் ஆட்சியை கலைக்க வேண்டும்’ - தினகரன்

“எம்.ஜி.ஆர் ஆட்சியை ஜெ., கலைத்தாரா..?”- தினகரனை சாடும் ஜெயக்குமார்

இதற்கு எதிர்வினையாற்றியுள்ளார் அமைச்சர் ஜெயக்குமார்

‘எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்ட ஆட்சியை ஜெயலலிதா கலைத்தார். அதைப் போலத்தான் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சியை கலைக்க வேண்டும்' என்று டிடிவி தினகரன் பேசியதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார் தமிழக அமைச்சர் ஜெயக்குமார். 

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்குப் பேட்டியளித்த போது, “இப்போது நடந்து கொண்டிருப்பது அம்மா (ஜெயலலிதா) ஆட்சியே கிடையாது. அம்மா அவர்கள் உருவாக்கிய ஆட்சி. இது துரோகிகள் நடத்தும் ஆட்சி. இந்த ஆட்சியை கவிழ்த்தேயாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். 

திமுக-வில் உறுப்பினராக இருந்து, அக்கட்சி தேர்தலில் வெற்றிபெற பாடுபட்டவர் எம்.ஜி.ஆர். ஆனால், அதற்கு எதிராக அவர் அதிமுக என்ற கட்சியை தொடங்கவில்லையா. அவர், அதிமுக என்ற கட்சியைத் தொடங்கியதால், அண்ணாவுக்கு எதிராக செயல்பட்டார் என்று சொல்ல முடியுமா. அப்படிப் பார்த்தால் 1988 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர் உருவாக்கிய ஆட்சியை ஜெயலலிதா கலைக்கவில்லையா? 

அதைப் போலத்தான் தற்போதைய ஆட்சியை கலைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இது காலத்தின் கட்டாயம்” என்று பேசினார்.

இதற்கு எதிர்வினையாற்றியுள்ள ஜெயக்குமார், “தினகரன் பேசியதை சூடு, சொரணை, ரோஷமுள்ள எந்த அதிமுக தொண்டனும் ஏற்றுக் கொள்ளமாட்டான். எம்.ஜி.ஆர் மீது பக்தி கொண்ட, அம்மா (ஜெயலலிதா) மீது பக்தி கொண்ட எந்தத் தொண்டனும் தினகரன் கருத்தை ஏற்றுக் கொள்ளமாட்டான். 

ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து இன்று அம்மா மீதே குற்றம் சுமத்தும் அளவுக்கு வந்துவிட்டார் தினகரன். அம்மாவால், அவர் எம்.பி ஆக்கப்பட்டார். ஆனால் அதே அம்மாதான், நாட்டை விட்டே தினகரனை துரத்தினார். இன்று அம்மா இல்லாத தைரியத்தில் இப்படியெல்லாம் பேசி வருகிறார். இதுதான் அவரது சுயரூபம்” என்று கடுகடுத்துள்ளார். 


 

.